IPL 2018:வில்லியம்சன் அபார ஆட்டம்!இமாலய இலக்கில் சறுக்கிய ஹைதராபாத் அணி! பெங்களூரு அணி சுமாரான வெற்றி!

Default Image

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரில் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 218 ரன்கள் குவித்தது.

பெங்களூருவில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் வில்லியம்சன் பீல்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த பெங்களூரு அணி பார்த்தீவ் படேல் (1) விக்கெட்டை விரைவாக இழந்தது. சந்தீப் சர்மா வீசிய பேக் ஆஃப் லெந்த் பந்தை பார்த்தீவ் படேல் லெக் திசையில் விளாச முயன்ற போது பந்து மட்டை விளிம்பில் பட்டு தேர்டுமேன் திசையில் நின்ற சித்தார்த் கவுலிடம் கேட்ச் ஆனது. இதையடுத்து விராட் கோலியுடன் இணைந்த டி வில்லியர்ஸ், ஷகிப் அல் ஹசன் வீசிய 2-வது ஓவரிலும், சந்தீப் சர்மா வீசிய அடுத்த ஓவரிலும் தொடர்ச்சியாக தலா இரு பவுண்டரிகள் விரட்டினார். விராட் கோலி 11 பந்தில், 2 பவுண்டரிகளுடன் 12 ரன்கள் எடுத்த நிலையில் ரஷித் கான் ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே வீசிய கூக்ளி பந்தில் ஸ்டெம்பை பறிகொடுத்தார்.

அப்போது ஸ்கோர் 4.5 ஓவர்களில் 38 ஆக இருந்தது. இதையடுத்து மொயின் அலி களமிறங்கினார். பவர்பிளேவில் பெங்களூரு அணி 44 ரன்கள் சேர்த்தது. பசில் தம்பி வீசிய 8-வது ஓவரில் மொயின் அலி தொடர்ச்சியாக மிட் ஆஃப் மற்றும் ஸ்கொயர் லெக் திசையில் சிக்ஸர் விளாசினார். தொடர்ந்து சந்தீப் சர்மா, ரஷித் கான் ஆகியோரது ஓவர்களிலும் மொயின் அலி சிக்ஸர் விளாசினார். சித்தார்த் கவுல் வீசிய 12-வது ஓவரில் டி வில்லியர்ஸ் 2 பவுண்டரிகளும், மொயின் அலி ஒரு சிக்ஸரும் விளாச அந்த ஓவரில் 18 ரன்கள் சேர்க்கப்பட்டது. அதிரடியாக விளையாடிய மொயின் அலி 25 பந்துகளில், 5 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் அரை சதம் அடித்தார். மறுமுனையில் நேர்த்தியாக பேட் செய்த டி வில்லியர்ஸ் 32 பந்துகளில், 10 பவுண்டரிகளுடன் அரை சதம் கடந்தார்.

பசில் தம்பி வீசிய 13-வது ஓவரில் டி வில்லியர்ஸ் இமாலய சிக்ஸர் ஒன்றை விளாச, பந்து மைதானத்தை விட்டு வெளியே சென்றது. சந்தீப் சர்மா வீசிய அடுத்த ஓவரில் லாங் ஆன் திசையில் மொயின் அலி சிக்ஸர் விளாசி அசத்தினார். அச்சுறுத்தலாக விளங்கிய இந்த ஜோடியை 15-வது ஓவரில் ரஷித் கான் வெளியேற்றினார். டி வில்லியர்ஸ் 39 பந்துகளில், ஒரு சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 69 ரன்கள் எடுத்த நிலையில் ஷிகர் தவணிடம் கேட்ச் கொடுத்தும், மொயின் அலி 34 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் விளாசிய நிலையில் கோஸ்வாமியிடம் கேட்ச் கொடுத்தும் ஆட்டமிழந்தனர். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 107 ரன்கள் குவித்தது.

இதையடுத்து களமிறங்கிய மன்தீப் சிங் (4), சித்தார்த் கவுல் பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடிய காலின் டி கிராண்ட் ஹோம் 17 பந்துகளில் 4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 40 ரன்கள் விளாசிய நிலையில் சித்தார்த் கவுல் பந்தில் வெளியேறினார். 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 218 ரன்கள் குவித்தது. சர்ப்ராஸ் கான் 22, டிம் சவுதி ஒரு ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஹைதராபாத் தரப்பில் ரஷித் கான் 3 விக்கெட்கள் கைப்பற்றினார். இதையடுத்து 219 ரன்கள் இலக்குடன் ஹைதராபாத் பேட்டிங்கை தொடங்கியது.

இதையடுத்து 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் களமிறங்கினர். 2-வது ஓவரை சவுத்தி வீச அந்த ஓவரில் தவான், ஹேல்ஸ் இருவரும் தலா ஒரு சிக்ஸர் அடித்தனர். ஐதராபாத் அணி 5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 47 ரன்கள் எடுத்தது.

5-வது ஓவரை சஹால் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் தவான் ஆட்டமிழந்தார். அவர் 18 ரன்கள் எடுத்தார். மோயின் அலி வீசிய 8-வது ஓவரின் கடைசி பந்தை ஹேல்ஸ் தூக்கி அடித்தார்.

அந்த பந்து சிக்ஸர் போகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பவுண்டரி கோட்டில் நின்று கொண்டிருந்த டி வில்லியர்ஸ் அந்த பந்தை கேட்ச் பிடித்தார். இதனால் ஹேல்ஸ் 24 பந்தில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

வில்லியம்சனின் சிறப்பான ஆட்டத்தால் ஐதராபாத் அணி 10 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடிய வில்லியம்சன் 28 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து வில்லியம்சன், மணிஷ் பாண்டே இருவரும் பொறுப்புடன் விளையாடி ரன் குவித்தனர். இதனால் ஐதராபாத் அணி 15 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது. கடைசி 5 ஓவரில் ஐதராபாத் அணியின் வெற்றிக்கு 67 ரன்கள் தேவைப்பட்டது. சிறப்பாக விளையாடிய மணிஷ் பாண்டேவும் அரைசதம் கடந்தார்.

17-வது ஓவரை வீசிய சவுத்தி 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். 18-வது ஓவரை மொகமது சிராஜ் வீசினார். அந்த ஓவரில் ஐதராபாத் அணி 14 ரன்கள் எடுத்தது. இதனால் கடைசி இரண்டு ஓவரில் ஐதராபாத் அணியின் வெற்றிக்கு 35 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை சவுத்தி வீசினார். அந்த ஓவரில் ஐதராபாத் அணி 15 ரன்கள் எடுத்தது. இதனால் கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டது.

கடைசி ஓவரை சிராஜ் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் வில்லியம்சன் ஆட்டமிழந்தார். அவர் 42 பந்தில் 81 ரன்கள் எடுத்தார். இதில் 7 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத்தொடர்ந்து தீபக் ஹூடா களமிறங்கினார். இறுதியில் ஐதராபாத் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்தது.

இதன்மூலம் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை தக்கவைத்து கொண்டது. பெங்களூரு அணியின் டி வில்லியர்ஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்