IPL 2018:மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சறுக்கல் …!நட்சத்திர வீரர் திடீர் விலகல் ….!
ஐபிஎல் தொடரில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ் முதுகு வலி காரணமாக விலகியுள்ளார்.
ஏற்கெனவே, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து மிட்ஷெல் ஸ்டார்க் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ள நிலையில், இப்போது ஐபிஎல் தொடரில் இருந்து விலகும் 2-வது ஆஸ்திரேலியவர் கம்மின்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தகவலை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு 11-வது ஐபிஎல் சீசனுக்காக வலதுகை வேகப்பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸை ரூ.5.40 கோடிக்கு ஏலத்தில் எடுத்து இருந்தது. சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு எதிராக மும்பையில் நடந்த முதல்போட்டியிலேயே பாட் கம்மின்ஸ் முதுகுவலி காரணமாக விளையாடவில்லை. இப்போது ஒட்டுமொத்தமாக தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இது குறித்து ஆஸ்திரேலிய அணியின் உடல்தகுதி வல்லுநர் டேவிட் பீக்லே கூறுகையில் ‘‘ தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இருந்தே பாட் கம்மின்ஸ்க்கு முதுகு வலி இருந்தது. இதைத் தொடர்ந்து அவரை ஸ்கேன் செய்து பார்த்ததில் இடுப்புப்பகுதியில் எலும்பு தசைநார் கிழிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் தொடர்ந்து அவரால் விளையாட முடியாது. அவ்வாறு விளையாடுவது அவருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். மிகப்பெரிய காயம் உருவாகும் முன்பாக அவர் சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியமாகிறது. இதனால், ஐபிஎல் போட்டித் தொடரில் இருந்து ஒட்டுமொத்தமாக விலகியுள்ளார். இவர் குணமாக இன்னும் 3 வாரங்கள் ஆகும்’ ’எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.