IPL 2018:முதல்ல ஹோட்டல்ல வெயிட்டர்…!அப்றோம் தான் ஆர்சிபி பிளேயர் …! வெயிட்டரா இருக்கும் போது 500 ரூபாய் சம்பளம் …!பிளேயர இருக்கும் போது 85 லட்சம் சம்பளம் …!
ஐபிஎல் போட்டியில் வீரர் ஒருவர் ஹோட்டலில் வெயிட்டராக வேலைபார்த்து, அதன் மூலம் கிடைத்த பணத்தில் பயிற்சி எடுத்து இடம் பிடித்துள்ளார்.
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் உள்ள இளம் வேகப்பந்து வீச்சாளர் குல்வந்த் கேஜ்ரோலியா அந்த வீரர். ஐபிஎல் சீசனில் பெங்களூரு அணி சார்பில் ரூ.85 லட்சத்துக்கு வாங்கப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம், ஜுன்ஜுனு என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் குல்வந்த் கேஜ்ரோலியா. 25 வயதான கேஜ்ரோலியா ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு வருவதற்கு முன், மளிகைக் கடைகளிலும், ஹோட்டல்களில் மேஜைகளை சுத்தம் செய்யும் பணியிலும், உணவு சப்ளை செய்யும் பிரிவிலும், ஆர்டர் எடுக்கும் பிரிவிலும் பணியாற்றியுள்ளார்.
இளம் வயதிலேயே கிரிக்கெட்டில் ஆர்வம் இருந்தபோதிலும், குடும்ப வறுமை, ஏழ்மை காரணமாக முழுயாக கிரிக்கெட் போட்டியில் கேஜ்ரோலியாவால் விளையாட முடியவில்லை.இதையடுத்து, கடந்த 2016-ம் ஆண்டு வரை கோவாவில் ஒரு ஹோட்டலில் பணியாற்றிய கேஜ்ரோலியா, அங்கிருந்து டெல்லிக்குச் சென்றார். ஆனால்,வீட்டில் அகமதபாத்துக்கு டிராவல்ஸ் நிறுவனத்தில் பணியாற்றச் செல்கிறேன் என்று பொய் சொல்லிவிட்டு கேஜ்ரோலியா டெல்லி சென்றார்.
டெல்லியில் உள்ள அசோக் விஹார் பகுதியில் தனது நண்பர்களுடன் தங்கி கேஜ்ரோலியா பகுதி நேரமாக ஹோட்டலில் பணியாற்றியுள்ளார். காலை நேரத்தில் கிரிக்கெட் பந்துவீச்சுப் பயிற்சியும் எடுத்து வந்துள்ளார். இவரின் பந்துவீச்சு திறமையைப் பார்த்த மற்ற வீரர்கள் தங்கள் அணிக்காக பந்துவீச நாள் ஒன்றுக்கு ரூ.500 ஊதியத்துக்கு அழைத்துள்ளனர். இவரும் ரூ.500 பெற்றுக்கொண்டு அவுட்சோர்ஸிங் முறையில் விளையாடியுள்ளார்.
அதன்பின் டெல்லியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி கிரிக்கெட் கிளப்பில் கேஜ்ரோலியா சேர்ந்து பயிற்சி எடுக்கத் தொடங்கினார். அங்கு இவரின் திறமையைப் பார்த்த பயிற்சியாளர் சஞ்சய் பரத்வாஜ் கேஜ்ரோலியாவுக்கு தேவையான பயிற்சிகள் அளித்து, அவரை மெருகேற்றி டெல்லி அணியில் இடம் பிடிக்க உதவியுள்ளார்.
கம்பீர், உன்முக் சந்த், நிதிஷ் ராணா ஆகிய வீரர்களை உருவாக்கிய சஞ்சய் பரத்வாஜ், அடுத்ததாக கேஜ்ரோலியாவை உருவாக்கி டெல்லி அணியில் பிடிக்க வைத்தார். கடந்த 2017-ம் ஆண்டு ரஞ்சிக் கோப்பையில் டெல்லி அணிக்காக கேஜ்ரோலியா களமிறங்கினார். அதன்பின் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 போட்டியில், டெல்லி அணி கோப்பையை வெல்ல கேஜ்ரோலியா முக்கியக் காரணமாக அமைந்தார்.
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இடம் பெற்றது குறித்து கேஜ்ரோலியா நிருபர்களிடம் கூறியதாவது:
”நான் கோவா நகரில் ஹோட்டலில் பணியாற்றும்போதே கிரிக்கெட் மீது தீவிரமாக ஆர்வம் இருந்தது. என் குடும்பத்தாரிடம் அகமதாபாத் செல்கிறேன் என்று கூறிவிட்டு, கிரிக்கெட்டுக்காக டெல்லி சென்றேன்.
டெல்லியில் உள்ள அசோக் விஹார் பகுதியில் எனது நண்பரின் அறையில் வாடகைக்காக தங்கி இருந்தேன். என் நண்பர் டெல்லியில் உள்ள ஜப்பான் பார்க் மைதானத்தில் நாள்தோறும் கிரிக்கெட் விளையாடுவார். அவருடன் சேர்ந்து பயிற்சி எடுத்தேன். அப்போது எனது திறமையைப் பார்த்த மற்ற அணியினர் அவர்களின் அணிக்காக பந்துவீச நாள்தோறும் 500 ரூபாய்க்கு என்னை ஒப்பந்தம் செய்தனர். அவர்களுக்காக விளையாடினேன்.
அப்போதுதான், சஞ்சய் பரத்வாஜின் அறிமுகம் எனக்கு கிடைத்தது. இவர் மூலம்தான் கவுதம் கம்பீர் உள்ளிட்ட முக்கிய வீரர்களின் அறிமுகம் கிடைத்தது. என் வீட்டில் கேட்கும்போதெல்லாம், அகமதாபாத்தில் இருக்கிறேன் என்று கூறிவிட்டு, டெல்லியில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தேன். ஒரு நாள் கூட கிரிக்கெட் பயிற்சியை தவறவிடாமல் சென்று வந்தேன். இதன் மூலம் எனக்கு 2017-ம் ஆண்டு ரஞ்சிக் கோப்பையில் டெல்லி அணியில் விளையாட இடம் கிடைத்தது. அதன்பின் கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி என்னை ரூ.10 லட்சத்துக்கு விலைக்கு வாங்கினார்கள்.ஆனால் ஒருபோட்டியில் கூட களமிறக்கவில்லை.
ஆனால், சயத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 போட்டியை வென்ற டெல்லி அணியில் இடம் பெற்றேன். அதன்பின் நடந்த ஐபிஎல் ஏலத்தில் பெங்களூரு அணி என்னை ரூ.85 லட்சத்துக்கு விலைக்கு வாங்கியது. இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் சகோதரி திருமணத்துக்கு வாங்கிய கடனை இந்தப் பணத்தில் அடைத்திருக்கிறேன். என் சகோதரரை சி.ஏ. படிக்க வைத்து வருகிறேன்.
இப்போது பெங்களூரு அணியில் விராட் கோலி, டீவில்லியர்ஸ் போன்ற நட்சத்திர வீரர்களுடன் விளையாடுவதை நினைக்கும் போது, பெருமையாக இருக்கிறது.”
இவ்வாறு கேஜ்ரோலியா தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.