IPL 2018:மீண்டும் மிரட்டுவார்களா விசில் வீரர்கள்? ஹைதராபாத் அணி பணியுமா?பாயுமா? ஹைதராபாத் – சென்னை மோதல் !
ஹைதராபாத், சென்னை ஆகிய இரு அணிகளும் இதுவரை தலா 4 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளன. எனினும் ரன்விகித அடிப்படையில் சென்னை அணி புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. கேன் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணி இந்த சீசனை தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் வெற்றி பெற்று சிறப்பான முறையில் தொடங்கியது. அந்த அணியின் தொடர்ச்சியான வெற்றிகளுக்கு பஞ்சாப் அணி கடந்த ஆட்டத்தில் முட்டுக்கட்டை போட்டது. மொகாலியில் நடைபெற்ற அந்த ஆட்டத்தில் கிறிஸ் கெயில் 64 பந்துகளில், 104 ரன்கள் விளாசி ஹைதராபாத் அணியை மிரளச் செய்திருந்தார்.
பந்து வீச்சு, பேட்டிங்கில் ஒருசேர திறனை வெளிப்படுத்த தவறிய ஹைதராபாத் அணி அந்த ஆட்டத்தின் சுவடுகளை மறந்து, மீண்டு வரும் விதமாக சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தை சந்திக்கிறது. ஹைதராபாத் வெற்றி பெற்ற 3 ஆட்டங்களிலும் குறைந்த இலக்கையை துரத்தியிருந்தது. ஆனால் சென்னை அணிக்கு எதிராக பெரிய அளவிலான இலக்கை (193 ரன்கள்) துரத்திய போது தடுமாற்றம் அடைந்தது. வில்லியம்சன், ஷிகர் தவண் ஆகியோரை மட்டுமே நம்பியிருப்பது சற்று பின்னடைவாக உள்ளது.
மணீஷ் பாண்டே, யூசுப் பதான், தீபக் ஹூடா, ஷகிப் அல்ஹசன் என அனுபவ வீரர்கள் இருந்தாலும் இவர்கள் ஒருசேர கூட்டாக திறனை வெளிப்படுத்தத் தவறுகின்றனர். தொடக்க வீரரான விருத்திமான் சாஹாவிடம் இருந்தும் பெரிய அளவிலான இன்னிங்ஸ் வெளிப்படவில்லை.
அநேகமாக இன்றைய ஆட்டத்தில் அவரது பேட்டிங் வரிசை மாற்றி அமைக்கப்படக்கூடும் என கருதப்படுகிறது.பந்து வீச்சில் புவனேஷ்வர் குமார், சித்தார்த் கவுல், பில்லி ஸ்டேன்லேக், ஷகிப் அல்ஹசன் ஆகியோர் நெருக்கடி கொடுக்கக்கூடும். சுழற்பந்து வீச்சாளரான ரஷித்கான் கடந்த ஆட்டத்தில் 55 ரன்களை வாரி வழங்கினார். இந்த சீசனில் அவர், 3 விக்கெட்களை மட்டுமே கைப்பற்றி உள்ளார். இதனால் உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்த வேண்டிய கட்டத்தில் அவர் உள்ளார்.
காவிரி பிரச்சினை காரணமாக சொந்த மைதானத்தை புனேவுக்கு மாற்றிக் கொண்டுள்ள சென்னை அணி, அங்கு நேற்றுமுன்தினம் விளையாடிய முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை புரட்டியெடுத்தது. ஷேன் வாட்சன் 57 பந்துகளில் 106 ரன்கள் விளாசி மிரட்டினார்.
இந்த சீசனில் ஆல்ரவுண்டராக சிறந்த பங்களிப்பை வழங்கி வரும் அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும். சுரேஷ் ரெய்னா பார்முக்கு திரும்பியிருப்பது மேலும் வலுசேர்த்துள்ளது. இவர்களுடன் அம்பாட்டி ராயுடு, தோனி, சேம் பில்லிங்ஸ், டுவைன் பிராவோ ஆகியோரும் மிரட்ட காத்திருக்கின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.