2 வருடங்களுக்கு பிறகு திரும்பி உள்ள சென்னை அணி, பெங்களூருவை விட வலுவாகவே உள்ளது. சென்னை அணி 5 ஆட்டங்களில் 4 வெற்றிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் 2-வது இடம் வகிக்கிறது. அதேவேளையில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி 5 ஆட்டங்களில் 2 வெற்றி, 3 தோல்விகளுடன் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. அந்த அணி கடைசியாக டெல்லி டேர்டெவில்ஸை வீழ்த்திய உற்சாகத்தில் உள்ளது. டி வில்லியர்ஸ் மிரட்டும் வகையிலான அதிரடிக்கு திரும்பி இருப்பது பெங்களூரு அணியின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
டெல்லி அணிக்கு எதிராக 39 பந்துகளில் 90 ரன்கள் விளாசி வெற்றியில் பிரதான பங்கு வகித்திருந்தார் டி வில்லியர்ஸ். அந்த ஆட்டத்தில் 175 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய நிலையில் டி வில்லியர்ஸ் ஒற்றை ஆளாக ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு தனது அசாத்தியமான ஆட்டத்தால் வெற்றியை அறுவடை செய்தார். அவரிடம் இருந்து மேலும் ஒரு மிரளச் செய்யும் அளவிலான ஆட்டம் வெளிப்படக்கூடும்.
சென்னை அணியின் பந்து வீச்சுக்கு அவர், கடும் சவாலாக இருக்கக்கூடும். அதேவேளையில் விராட் கோலி ராஜஸ்தான் அணிக்கு எதிராக 52 ரன்களும், மும்பை அணிக்கு எதிராக சேர்த்த 92 ரன்களும் அணிக்கு கூடுதல் நம்பிக்கையை கொடுத்துள்ளது. இவர்களுடன் குயிண்டன் டி காக், மனன் வோரா ஆகியோரும் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் பேட்டிங் கூடுதல் வலுப்பெறும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 5 ஆட்டங்களில் 4 ஆட்டத்தை கடைசி ஓவர் வரை கொண்டு சென்று நெருக்கமாகவே முடித்துள்ளது. இலக்கை துரத்திய 4 ஆட்டங்களில் 2-ல் கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது. தோல்வியடைந்த ஆட்டமும் கடைசி ஓவர் பரபரப்புக்கு விதிவிலக்காக அமையவில்லை. கடைசியாக மோதிய ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 182 ரன்கள் குவித்த நிலையில் கடைசி ஓவரில் 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை வசப்படுத்தியது சென்னை அணி.
ராஜஸ்தான் அணிக்கு எதிராக 57 பந்துகளில் 106 ரன்கள் விளாசிய ஷேன் வாட்சன், ஹைதராபாத் அணிக்கு எதிராக 37 பந்துகளில் 79 ரன்கள் குவித்த அம்பாட்டி ராயுடு ஆகியோரிடம் இருந்து மேலும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும். இதில் அம்பாட்டி ராயுடு இதுவரை 201 ரன்கள் குவித்து அதிக ரன்கள் சேர்த்தவர்கள் பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளார். அதேவேளையில் 184 ரன்கள் சேர்த்துள்ள வாட்சன் பந்து வீச்சில் 6 விக்கெட்களை கைப்பற்றி ஆல்ரவுண்டராக பலம் சேர்த்து வருகிறார். சுரேஷ் ரெய்னா (118), தோனி (139), டுவைன் பிராவோ (104), ஷேம் பில்லிங்ஸ் (68) ஆகியாரும் மட்டையை சுழற்றத் தயாராக உள்ளனர்.
வலுவான சென்னை அணியின் பேட்டிங் வரிசைக்கு எதிராக பெங்களூரு அணி பந்து வீச்சை பலப்படுத்த வேண்டிய கட்டத்தில் உள்ளது. அந்த அணி இந்த சீசினில் சொந்த மண்ணில் நடைபெற்ற இரு ஆட்டங்களில் 200 ரன்களுக்கு மேல் விட்டுக் கொடுத்திருந்தது என்பது குறிபிடத்தக்கது. அநேகமாக இன்றைய ஆட்டத்தில் கோரே ஆண்டர்சனுக்கு பதிலாக காலின் டி கிராண்ட் ஹோம் இடம் பெற வாய்ப்புள்ளது.
வேகப் பந்து வீச்சில் உமேஷ் யாதவ், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் சிறப்பான தொடக்கம் அமைத்துக் கொடுக்கும் போதிலும் அதனை மற்ற பந்து வீச்சாளர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளாதது பின்னடைவாக உள்ளது. சுழலில் யுவேந்திரா சாஹல், வாஷிங்டன் சுந்தர் ஜோடி உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சுழற்பந்து வீச்சில் சற்று தடுமாறி வருகிறது. அந்த அணி சுழற்பந்து வீச்சுக்கு எதிராக சராசரியாக 7.70 ரன்கள் சேர்த்துள்ள நிலையில் 10 விக்கெட்களை இழந்துள்ளது. இதனால் சாஹல், வாஷிங்டன் சுந்தர் கூட்டணி சிறப்பாக செயல்படக்கூடும் என கருதப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.