IPL 2018:மாநில அரசு கைவிட்ட நிலையில் மத்திய அரசிடம் ஓடிய ஐபிஎல் நிர்வாகம் …!
தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஒரு வாரத்துக்கு மேலாக அரசியல் கட்சிகள், தமிழ் இயக்கங்கள், விவசாய சங்கங்கள், திரைப்படத்துறையினர் என பல்வேறு தரப்பினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில்,தமிழகத்தைச் சேர்ந்த பெரும்பாலான அரசியல் கட்சிகள் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் போட்டியை நடத்தக் கூடாது என உள்ளிட்ட பல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதையும் மீறி போட்டி நடத்தப்பட்டால், மைதானத்தில் போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதன் விளைவாக சேப்பாக்கம் மைதானத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை முதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. போட்டி நடைபெறும்போது மைதானத்துக்கு வெளியேயும், உள்ளேயும் 100 ஆய்வாளர்கள், 200 உதவி ஆய்வாளர்கள் உள்பட சுமார் 4 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இரண்டு கூடுதல் ஆணையர்கள், 3 இணை ஆணையர்கள், 13 துணை ஆணையர்கள், 29 உதவி ஆணையர்கள் ஆகியோர் பாதுகாப்பைக் கண்காணிக்கின்றனர். மேலும் கமாண்டோ படையின் ஒரு அணியும் அதி தீவிரப் படையின் 4 குழுக்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் நடைபெறவுள்ள ஏழு ஐபிஎல் ஆட்டங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் கெளபாவிடம் ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து ராஜீவ் சுக்லா கூறியுள்ளதாவது,எங்களுடைய கோரிக்கைக்குப் பதிலளித்துள்ள உள்துறை செயலாளர், இதுகுறித்து சென்னை காவல்துறை தலைமை இயக்குநரிடம் பேசியதாகக் குறிப்பிட்டார். சென்னை ஐபிஎல் ஆட்டங்களில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார் என்று கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.