IPL 2018:தமிழக போலீசார் பாதுகாப்பு அளிக்க மறுத்துவிட்டதால் சென்னையில் நடைபெற இருந்த 6 ஐபிஎல் போட்டிகள் வேறு மாநிலத்திற்கு இடமாற்றம்!
காவிரி போராட்டத்தின் எதிரொலியாக,ஐபிஎல் தொடரில் சென்னையில் நடைபெறவுள்ள போட்டிகள் அனைத்தும்,வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
காவிரி மேலாண்மை வாரியம் கோரி தமிழகத்தில் நாளுக்கு நாள் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்தி, காவிரி போராட்டங்களை திசை திருப்பக் கூடாது என அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் கூறிவருகின்றன. இந்நிலையில், கடும் எதிர்ப்புக்கிடையே, சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று ஐபிஎல் போட்டி நடைபெற்றதால் அரசியல் கட்சியினர் மைதானத்தை முற்றுகையிட்டனர். போட்டி அரங்கிற்குள்ளும் இளைஞர்கள் எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, சென்னையில் நடைபெறவுள்ள எஞ்சிய 6 போட்டிகள் வேறு மாநிலத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை, ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஐபிஎல் போட்டிகளுக்கு பாதுகாப்பு அளிக்க தமிழக போலீசார் மறுத்துவிட்ட காரணத்தால், போட்டிகள் வேறு மாநிலத்திற்கு இடமாற்றம் செய்யப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சென்னையில் விளையாடும் போட்டிகள் வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்படும் நிலையில், 4 நகரங்களை பிசிசிஐ பரிந்துரைந்துள்ளது. அதன்படி, விசாகப்பட்டினம், திருவனந்தபுரம், புனே, ராஜ்கோட் ஆகிய 4 நகரங்களில் சென்னை அணி விளையாடும் போட்டிகளை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக பிசிசிஐ நிர்வாகக் குழு தலைவர் வினோத் ராய் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.