IPL 2018:சிஎஸ்கே &கேகேஆர் போட்டி ரசிகர்களுக்கு செம ட்ரீட்…! ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்திருப்பார்கள் என உறுதியாக நம்புகிறேன் ..!தல தோனி நெகிழ்ச்சி …!
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதும் கிரிக்கெட் போட்டி கடுமையான எதிர்ப்புக்கு இடையே நடைபெறுகிறது.
போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, தனது அணி முதலில் பந்து வீசும் என்று அறிவித்தார். இதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது.
ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய கொல்கத்தா அணி, சென்னை அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. துவக்க வீரர் லின் ( 22 ரன்கள்), சுனில் நரைன் ( 12 ரன்கள்) ஆட்டமிழந்தனர். அதிரடி காட்டி மிரட்டிய உத்தப்பா 16 பந்துகளில் 2 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் உட்பட 29 ரன்கள் எடுத்து இருந்த போது சுரேஷ் ரெய்னாவின் துல்லிய த்ரோவில் ரன் அவுட் ஆனார். ஒரு முனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும், கொல்கத்தா அணி சீரான வேகத்தில் ரன் எண்ணிக்கையை உயர்த்தியது.
7-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய ரஸ்ஸல், சென்னை அணியின் பந்து வீச்சை சிதறடித்தார். களத்தில் ருத்ரதாண்டவம் ஆடிய ரஸ்ஸல் 11 சிக்சர்களுடன் 36 பந்துகளில் 88 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசி நேர அதிரடியால் கொல்கத்தா அணி எதிர்பார்க்கப்பட்ட ரன்களை விட அதிகம் சேர்த்தது. நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் சேர்த்தது. சென்னை அணி தரப்பில் அதிகபட்சமாக வாட்சன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து,களமிறங்கிய சென்னை அணியில் துவக்க வீரர்கள் வாட்சன் 42,ரயுடா 39 ரன்கள் அடித்தனர்.மேலும் தோனி 25,ரெய்னா 6 அடித்தனர்.
18-வது ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை சூப்பர் கிங்ஸ் அணி எடுத்திருந்தது. பில்லிங்ஸ் 5 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் அதிரடியாக ஆடி 56 ரன்களை குவித்து டாம் கர்ரன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
பின்னர் பிராவோ ஆட வந்த நிலையில் கடைசி ஓவரில் பரபரப்பு ஏற்பட்டது. வந்தவுடன் அவர் அதிரடியாக சிக்ஸர் அடித்தார். கடைசி 2 பந்துகளில் 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ரவீந்திர ஜடேஜா சிக்ஸர் அடித்து சூப்பர் கிங்ஸ் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
பிராவோ, ஜடேஜா இருவரும் தலா 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்நிலையில் அபார வெற்றிக்குப் பிறகு கேப்டன் தோனி கூறியதாவது,2 ஆண்டுகளுக்குப் பிறகு வந்து இங்கு வெற்றி பெறுவது நல்ல உணர்வை தருகிறது. முதல் இன்னிங்ஸ், 2வது இன்னிங்ஸ் இரண்டுமே ரசிகர்களுக்குத் தகுதியான இன்னிங்ஸ்களே.
அனைவருக்குமான உணர்ச்சி மட்டங்கள் உண்டு. ஆனால் இங்கு வீர்ர்கள் அமரும் இடத்தில் இருக்கும் போது ஒரு குறிப்பிட்ட தருணத்தில் பவுலர் மீதும் பேட்ஸ்மென் மீதும் நம்பிக்கை வைக்க வேண்டியது அவசியம். பாசிட்டிவ் ஆன ஆற்றல் உதவுகிறது.
என்னுடைய நாடித்துடிப்பும் எகிறியது, அதனால்தான் ஓய்வறை என்ற ஒன்று உள்ளது. என் உணர்வுகளை நான் ஓய்வறையில் மறைவாகவே வெளிப்படுத்துவேன், இங்கு வெளியில் அமரும்போது கிடையாது. களத்தில் நம் உணர்வுகளை வெட்ட வெளிச்சம் போட்டுக் காட்டினால் வர்ணனையாளர்கள் நம்மைப் பற்றி பேசுவதற்கு இடம் கொடுப்பதாகும்.
சாம் பிலிங்ஸ் இப்படிப்பட்ட ஆட்டத்தை ஆடிப்பார்ப்பது நன்றாக இருக்கிறது. ஆம் நாங்களும் ரன் கொடுத்தோம், கொல்கத்தா நன்றாக பேட் செய்தார்கள். இரு அணி பவுலர்களுக்கும் கஷ்ட காலம்தான். ஆனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்திருப்பார்கள் என உறுதியாக நம்புகிறேன் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் மகேந்திர சிங்க் தோனி கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.