IPL 2018:கண்டிப்பா பிரவோக்கு அட்வைஸ் தேவை !ரயுடா உண்மையிலே சூப்பர் பேட்டிங் !தல தோனி புகழாரம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஹைதராபாத்தில் நடைபெற்ற பரபரப்பான ஐபிஎல் போட்டியில் சன் ரைசர்ஸ் அணியை த்ரில் வெற்றி பெற்றது. 4 ரன்களில் சன் ரைசர்ஸ் சோடை போனது.
22/3 என்ற நிலையிலிருந்து ஷாகிப் அல் ஹசன்(24) ஆட்டமிழக்கும்போது 71/4, 10.3 ஓவர்கள் முடிந்திருந்தன, தீபக் சாஹார் அதி அற்புதமாக வீசி 4 ஓவர்கள் 1 மெய்டன் 15 ரன்கள் 3 விக்கெட் என்று அசத்தினார். ஆனால் 71/4 என்ற நிலையில் திடீரென கேன் வில்லியம்சன் (51 பந்துகளில் 5 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 84 ரன்) மற்றும் யூசுப் பத்தான் (27 பந்துகள் 1 பவுண்டரி 4 சிக்சர்கள் 45) இணைந்து 79 ரன்களை 8 ஓவர்களில் விளாசியது ஆட்டத்தின் போக்கை மாற்றியது. கடைசியில் ரஷீத் கான் கூட 4 பந்துகளில் 17 விளாசினார். ஆனாலும் 178/6 என்று முடிந்த்து சன் ரைசர்ஸ் ஹைதராபாத்.
முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயுடுவின் அபாரமான 37 பந்து 79 ரன்களுடனும் ரெய்னாவின் அதிரடி அரைசதம் மற்றும் தோனியின் 208% ஸ்ட்ரைக் ரேட்டில் 25 ரன்களும் கைகொடுக்க 182 ரன்கள் எடுத்தது. ரஷீத் கான் 4 ஓவர்களில் 49 ரன்கள் விளாசப்பட்டார்.
இந்நிலையில் ஆட்டம் முடிந்து தோனி அம்பாத்தி ராயுடுவைப் பாராட்டினார். கடைசி ஓவர்களில் பிராவோ கொஞ்சம் சொதப்ப தோனி அவருக்கு அறிவுரை வழங்கினார்.
தோனி கூறியதாவது “நான் அவரது திட்டங்கள் எதையும் மாற்றக் கூறவில்லை. ஆனால் சில வேளைகளில் பிராவோ போன்ற சிறந்த வீரர்களுக்கும் அறிவுரை தேவைப்படும். தவறுகள் செய்வது இயல்பு ஆனால் அதிலிருந்து பாடம் கற்க வேண்டும் என்பதே முக்கியம்.
நிறைய தருணங்களில் இந்த விவாதங்களை மேற்கொண்டிருக்கிறோம். ஆனால் அதிக தருணங்களில் தவறுகள் செய்யும் போது பவுலர்கள் நாம் என்ன சொல்ல வருகிறோம் என்பதைப் புரிந்து கொள்கிறார்கள். முதல் சில ஆண்டுகள் ஐபிஎல்-ஐ ஒப்பிடும் போது பிட்ச்கள் கொஞ்சம் நன்றாக இருக்கின்றன. பேட்ஸ்மென்கள் வலுவாகவும் பெரிதாகவும் இருக்கின்றனர்.
பேட்ஸ்மென்களைப் பாராட்ட வேண்டும், பவுலர்களும் சீராக முன்னேற்றம் கண்டு வருகின்றனர். நாக் அவுட் சுற்றுக்களுக்கு நாங்கள் முன்னேறும்போது பவுலர்கள் புதிய திட்டங்களுடன் வருவார்கள். பெரிய ஸ்கோர்களை எடுப்பது அவ்வளவு சுலபமாக இருக்காது.
தீபக் சாஹர், ஷர்துல் தாக்குர் போன்றவர்களுக்கு வாய்ப்புகள் அளிக்க வேண்டும் என்பது முக்கியம். அவர்கள் சிறப்பாக ஆட வேண்டும் என்றே நான் நினைக்கிறேன். ஆம் அவர்களிடம் பிழைகள் உள்ளன, ஆனாலும் திரும்பவும் மீண்டு நன்றாகவே வீசுகின்றனர். ராயுடு அபாரமான ஒரு வீரர்.
அவரை எந்த இடத்தில் இறக்குவது? அவர் நம்பர் 3-ல் இறங்குகிறார், எல்லா டவுன்களிலும் அவரை இறக்க முடியும். எங்கு இறங்கினாலும் சிறப்பாக ஆடுகிறார், பெரிய ஷாட்களை ஆடும்போதும் அவரிடம் நல்ல ஷேப் உள்ளது. எங்கு வேண்டுமானாலும் அவர் இறங்கலாம், ஆனால் நான் அவரை தொடக்கத்தில் இறக்கவே விரும்புகிறேன். அந்த இடத்தில்தான் அவர் அபாயகரமானவராகத் திகழ்கிறார்” இவ்வாறு கூறினார் தோனி.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.