IPL 2018:ஐபிஎல் போட்டியிலே வரலாறு காணாத போலீஸ் பாதுகாப்பு …!சுமார் 4 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு..!
சுமார் 4 ஆயிரம் போலீசார், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடத்த பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால்,சேப்பாக்கம் பகுதியில் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், ஸ்டெர்லைட் ஆலையை மூடவும் வலியுறுத்தி, அரசியல் கட்சிகளும், பல்வேறு தமிழ் அமைப்பினரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், சென்னையில் ஐ.பி.எல். போட்டிகளை நடத்தினால், இளைஞர்களின் கவனம் திசை திரும்பிவிடும் எனக் கூறியுள்ள தமிழ் அமைப்புகள், சென்னையில் ஐ.பி.எல். போட்டிகளை நடத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எதிர்ப்பை மீறி போட்டிகளை நடத்தினால், சேப்பாக்கம் மைதானத்தையும், கிரிக்கெட் வீரர்கள் தங்கும் ஓட்டல்களையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், ஐ.பி.எல். போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று, கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவுள்ளது. இதனால், இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிட உள்ளதாக நாம் தமிழர், தமிழக வாழ்வுரிமை கட்சி, எஸ்.டி.பி.ஐ. ஆகிய அரசியல் கட்சிகளும், இயக்குநர் பாரதிராஜா தலைமையிலான தமிழ் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை, விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு, காவேரி மீட்புக்குழு, மே 17 இயக்கம் ஆகியவை அமைப்புகளும் அறிவித்துள்ளன. எஸ்.டி.பி.ஐ. கட்சி மட்டும் போராட்டம் நடத்தவுள்ள நேரத்தை அறிவித்த நிலையில், மற்ற அனைத்து அமைப்புகளும் போராட்ட நேரத்தை ரகசியமாக வைத்துள்ளன. அவர்கள் எப்போது வேண்டுமானாலும் போராட்டத்தில் ஈடுபட வாய்ப்புள்ளதால், சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சேப்பாக்கம் மைதானம் அமைந்துள்ள பகுதி மட்டுமின்றி, சேப்பாக்கம் மைதானத்திற்கு செல்லும் வழிகளான வாலாஜா சாலை, திருவல்லிக்கேணி சாலை, பாரதி சாலை, மெரினா கடற்கரை சாலை என அனைத்துப் பகுதிகளிலும் சுமார் 4 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, ஐ.பி.எல். போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாரதிராஜா தலைமையிலான தமிழ் கலை இலக்கியப் பண்பாட்டுப் பேரவை, சேப்பாக்கம் மைதானத்தின் சுற்றுச்சுவர்களிலேயே போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.