கடந்த 20ஆம் தேதி டெல்லியில் நடந்த முக்கியமான லீக் சுற்று டெல்லி டேர்டெவில்ஸ் அணியிடம் 11 ரன்களில் பரிதோபமாக தோற்றது மும்பை இந்தியன்ஸ் அணி. ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறாமல் ஏற்கனவே வெளியேறிய டெல்லி அணியிடம் மும்பை இந்தியன்ஸ் அணி தோற்றது அந்த அணியின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய வேதனையை ஏற்படுத்தியது.
இந்தத் தொடரில் மிகவும் மோசமாக விளையாடிய கேப்டன் ரோகித் சர்மா, 300 ரன்களுக்கும் குறைவாக 286 ரன்கள் மட்டுமே சேர்த்தார். கடந்த 11-ஐபி்ல் போட்டிகளில் ரோகித் சர்மா 300 ரன்களுக்கு குறைவாக சேர்த்த முதல் போட்டி இதுவாக அமைந்தது.
அதேசமயம் ஒட்டுமொத்த ஐபில் போட்டிகளில் சராசரியாக 300 ரன்களுக்கு மேல் சேர்த்த ஒரே வீரர் எனும் பெருமையை சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா மட்டுமே பெற்றுள்ளார்.
டெல்லி டேர்டெவில்ஸ் அணியிடம் தோற்றது குறித்து அணியின் கேப்டன் சார்பில் கருத்து தெரிவித்த ரோகித் சர்மா தனிப்பட்ட முறையில் கருத்து ஏதும் தெரிவிக்காமல் இருந்தார். இந்நிலையில், ரோகித் சர்மா உருக்கமாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், “ ஐபில் தொடரில் ப்ளேஆஃப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது என்னை மிகவும் வேதனைக்கு உள்ளாக்குகிறது. இதுதான் வாழ்க்கை, இதுதான் விளையாட்டு என்று யூகித்துக்கொள்கிறேன். நமக்கு என்ன தேவையோ அது எப்போதும் நமக்கு எப்போதும் கிடைக்காது.
ஐபிஎல் போட்டியில் நாங்கள் கடுமையாகப் போராடினோம். ஆனால், எங்களைக் காட்டிலும் எதிரணியினர் சிறிது சிறப்பாக விளையாடினார்கள். அடுத்த ஆண்டில் அனைத்து விஷயங்களும் மாறும்’’ எனத் தெரிவித்துள்ளார்.
இந்த ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டயா ஆகியோரை மட்டும் தக்கவைத்துக்கொண்டது. கெய்ரன் பொலார்டு, குர்னல் பாண்டயாவை ஏலத்தில் எடுத்தது. இதில் பும்ரா பந்துவீச்சில் சிறப்பாகச் செயல்பட்டாலும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கெய்ரன் பொலார்டு சொதப்பிவிட்டார்.
பாண்டயா சகோரதர்கள் பந்து வீச்சிலும், பேட்டிங்கிலும் எந்த விதத்திலும் சோடைபோகாமல் தங்கள் திறமையை நிரூபித்துவிட்டனர். இந்த ஆண்டும் சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று கணிக்கப்பட்ட நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்குள் செல்லாமல் நடையைக் கட்டியது ரசிகர்களுக்கு வேதனையளிக்கும் ஒன்றாகும்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.