இந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாஹர் 4 ஓவர்கள் வீசிய ஒரு மெய்டன், 15 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். சன்ரைசர்ஸ் அணியின் பேட்டிங்கை தொடக்கத்திலேயே சிதைத்ததில் அவருக்கு முக்கியப் பங்கு உண்டு.
இதுவரை இந்த சீசனில் 5 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே அணி 3 போட்டிகளில் கடைசி ஓவரில் பரபரப்பான கட்டத்திலேயே வெற்றியைப் பெற்றது. அப்படித்தான் சன்ரைசர்ஸ் அணியுடனான போட்டியிலும் கடைசி ஒவரில் வெற்றி பெற்றது.
வெற்றிக்குப் பின் வேகப்பந்துவீச்சாளர் சாஹர் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,அணி இக்கட்டான சூழலில் இருக்கும் போது வெற்றிபெற வைப்பது எல்லாம் கேப்டன் தோனிதான். இந்த போட்டியின் வெற்றிக்கு பின்பும் தோனிதான் இருக்கிறார். இந்த வெற்றியை நினைத்து பெருமைப்படுகிறோம் என்றாலும் அதற்கு தோனியே காரணம்.
இக்கட்டான தருணங்களில் பந்துவீச்சாளர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும் போது, அவரின் ஆலோசனை எங்களுக்கு மிக உதவியாக இருக்கும். இந்தப் போட்டியில் யூசுப் பதானும், கேன் வில்லியம்சனும் நல்ல பாட்னர்ஷிப் அமைத்து ரன்களைச் சேர்த்து வந்தனர்.
அவர்களைப் பிரிக்க முடியாமல் சிரமப்பட்டபோது, தோனிதான் சில ஆலோசனைகள் அளித்து பந்துவீசச் சொன்னார். தோனியின் ஆலோசனைக்கு ஏற்ப தாக்கூரும், பிராவோவும பந்து வீசி அந்த கூட்டணியை உடைத்தனர். எதிரணியின் கூட்டணியை உடைப்பதும், வெற்றியைப் பெறுவதும் தோனியின் கேப்டன்ஷிப்பின் தனித்தன்மையாகும்.
மைதானத்துக்குள் சிஎஸ்கே அணியினர் அனைவரும் ஒரு குடும்பத்தைப் போல் இணைந்தே இருப்போம். அந்த மனநிலையில்தான் விளையாடுவோம். ஹைதராபாத் ஆடுகளத்தில் பந்துவீசுவது மிகவும் மகிழ்ச்சியாக இருந்து. பந்துகள் நன்றாக எழும்பின, ஸ்விங் ஆனது. என்னுடைய பந்துவீச்சும், செயல்பாடும் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாஹர் தெரிவித்தார்.