IPL 2018:இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணியை பழிதீர்க்குமா ஹைதராபாத் அணி?பஞ்சாப்பின் அதிரடி மீண்டும் ஹைதராபாத் அணியிடம் எடுபடுமா?
கிங்ஸ் லெவன் பஞ்சாப், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ,ஐபிஎல் தொடரில் 24 ஆட்டத்தில் இன்று இரவு 8 மணிக்கு ஹைதராபாத்தில் நடைபெறும் ஆட்டத்தில் மோதுகின்றன.
கேன் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணி ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை சிறப்பாக தொடங்கிய நிலையில் அடுத்தடுத்து 2 ஆட்டங்களில் தோல்வியடைந்தது. ஆனால் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் 118 ரன்களே சேர்த்த போதிலும் தனது வலுவான பந்து வீச்சால் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது 4-வது வெற்றியை பதிவு செய்தது. நட்சத்திர வேகப் பந்து வீச்சாளர்களான புவனேஷ்வர் குமார், பில்லி ஸ்டேன்லேக் ஆகியோர் காயம் காரணமாக களமிறங்காத நிலையிலும் மற்ற பந்து வீச்சாளர்கள் மும்பை பேட்ஸ்மேன்களை திக்குமுக்காடச் செய்ததுதான் ஆட்டத்தில் உயரிய சிறப்பம்சமாக அமைந்தது.
ரன் குவிப்பதற்கு கடிமான வகையில் மாறியிருந்த வான்கடே ஆடுகளத்தில் ரஷித் கான், ஷகிப் அல்ஹசன், முகமது நபி ஆகியோரை உள்ளடக்கிய சுழல் கூட்டணியும், வேகப்பந்து வீச்சாளர்களான சித்தார்த் கவுல், பசில் தம்பி ஆகியோரும் மேம்பட்ட செயல்திறனை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு பெரிய அளவில் பங்களிப்பு செய்திருந்தனர். இந்த பந்து வீச்சு கூட்டணி பஞ்சாப் அணிக்கும் சவால் அளிக்கக்கூடும். புவனேஷ்வர் குமார் காயத்தில் இருந்து முழுவதும் குணமடையாததால் இன்றைய ஆட்டத்தில் களமிறங்குவது சந்தேகம் என்றே கருதப்படுகிறது.
அதேவேளையில் கை விரலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக பில்லி ஸ்டேன் லேக் இந்த சீசனில் இருந்தே விலகி உள்ளார். இவர்கள் இருவரும் விளையாடாவிட்டாலும் மற்ற வீரர்கள் பொறுப்புணர்வுடன் செயல்படும் திறனை பெற்றிருப்பதால் அணியின் பந்து வீச்சு சமநிலை எந்தவிதத்திலும் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லையென்றே கருதப்படுகிறது. முழங்கை காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள ஷிகர் தவண் கடந்த ஆட்டத்தில் 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதனால் அவர், சிறந்த வகையிலான தொடக்கத்தை கொடுக்க முயற்சிக்கக்கூடும்.
தொடர்ச்சியாக சிறந்த திறனை வெளிப்படுத்தத் தவறும் விருத்திமான் சாஹா கடும் நெருக்கடியில் உள்ளார். 6 ஆட்டத்தில் அவர், 62 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். அதேவேளையில் 259 ரன்கள் சேர்த்து அதிக ரன்கள் குவித்துள்ளவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள வில்லியம்சனிடம் இருந்து சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும். மணீஷ் பாண்டே, ஷகிப் அல்ஹசன், யூசுப் பதான் ஆகியோரும் மட்டையை சுழற்றும் பட்சத்தில் அணியின் பேட்டிங் கூடுதல் வலுப்பெறும்.
அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணி இந்த சீசனில் முற்றிலும் மாறுபட்ட வகையில் வெற்றிகரமாக வலம் வருகிறது. 6 ஆட்டங்களில் விளையாடிய உள்ள அந்த அணி 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. உடல் சோர்வு காரணமாக டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்காத கிறிஸ் கெயில் இன்றைய ஆட்டத்தில் களமிறங்கக்கூடும் என கருதப்படுகிறது. இந்த சீசனில் ஒரு சதம், இரண்டு அரை சதங்கள் விளாசி உள்ள கெயில் மீண்டும் ஒரு முறை எதிரணி பந்து வீச்சாளர்களுக்கு கடும் சவாலாக விளங்கக்கூடும்.
இரண்டு அரை சதங்களுடன் 236 ரன்கள் சேர்த்துள்ள மற்றொரு தொடக்க வீரரான கே.எல்.ராகுலும் மட்டையை சுழற்ற ஆயத்தமாக உள்ளார். இவர்களுடன் மயங்க் அகர்வால், கருண் நாயர் ஆகியோரும் பேட்டிங்கில் பலம் சேர்ப்பவர்களாக உள்ளனர். யுவராஜ் சிங் பார்ம் மட்டுமே கவலை அளிப்பதாக உள்ளது. 6 ஆட்டங்களில் விளையாடிய உள்ள அவர், 12.50 சராசரியுடன் 50 ரன்களே சேர்த்துள்ளார். அணி நிர்வாகத்தின் நம்பிக்கையை யுவராஜ் சிங் மீட்டெடுக்க வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளார்.
பந்து வீச்சில் முஜீப் உர் ரஹ்மான் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார். இந்தத் தொடரில் அனைவராலும் கவனிக்கப்படக்கூடிய வீரராக மாறி உள்ள அவர், 6 ஆட்டங்களிலும் சராசரியாக ஓவருக்கு 6.91 ரன்கள் மட்டுமே வழங்கி உள்ளார். டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதில் முஜீப் சிறந்த பங்களிப்பை வழங்கியிருந்தார். கடைசி ஓவரை அவர், திறம்பட வீசியிருந்தார். அவருடன் அஸ்வின் ஆன்ட்ரூ டை, அங்கித் ராஜ்புத் ஆகியோரும் நம்பிக்கை அளிப்பவர்களாக உள்ளனர்.
இந்த சீசனில் ஹைதராபாத் – பஞ்சாப் அணிகள் 2-வது முறையாக மோதுகின்றன. கடந்த 19-ம் தேதி மொகாலியில் நடைபெற்ற ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வீழ்த்தியிருந்தது.
இந்த ஆட்டத்தில்தான் கெயில் 63 பந்துகளில், 104 ரன்கள் விளாசியிருந்தார். இந்த தோல்விக்கு ஹைதராபாத் அணி தனது சொந்த மண்ணில் இன்று பதிலடி கொடுக்க முயற்சிக்கக்கூடும்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.