IPL 2018:இன்று முதல் போட்டி ..!சிஎஸ்கே -மும்பை மோதல் …! ரூ.26 கோடி பரிசுத்தொகை யாருக்கு ?
மும்பை வான்கடே மைதானத்தில் ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 11-வது சீசன் போட்டிகள் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. இந்தத் தொடரில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ்லெவன் பஞ்சாப், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி டேர்டெவில்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளுடன் இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பிறகு திரும்பி உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளும் கலந்து கொள்கின்றன.
மே 27-ம் தேதி வரை நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் மொத்தம் 60 ஆட்டங்கள் இடம்பெறுகின்றன. தொடக்க நாளான இன்று இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது.
இரு வருடங்களுக்குப் பிறகு திரும்பி உள்ள தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் அதிகரித்துள்ளது. கடந்த மாத இறுதியில் சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி வீரர்கள் மேற்கொண்ட பயிற்சியை காண்பதற்கு கூட்டம் நிரம்பி வழிந்ததே இதற்கு சாட்சி. புத்துணர்ச்சியுடன் திரும்பி உள்ள சென்னை அணி 3-வது முறையாக கோப்பையை வெல்ல வேண்டும் என்பதைத் தவிர ரசிகர்களிடம் வேறு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை.
இதற்கிடையே கடந்த சிலதினங்களுக்கு முன்பு “ரசிகர்களைவிட இம்முறை கோப்பையை வெல்ல வேண்டும் என நான் விரும்புகிறேன்” என பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. மிரட்டும் பேட்டிங் வரிசையை கடந்த 10 வருடங்களாக கொண்டிருந்த போதிலும் பெங்களூரு அணி ஒருமுறை கூட மகுடம் சூடவில்லை என்ற ஏக்கத்தின் வெளிப்பாடாகவே விராட் கோலியின் கருத்து அமைந்ததாக பார்க்கப்படுகிறது.
கோப்பையை வெல்வதற்கு முனைப்பு காட்டும் விதமாக அந்த அணியின் பந்து வீச்சு துறை பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கியமாக யுவேந்திரா சாஹலுடன், வாஷிங்டன் சுந்தர் இணைந்துள்ளது பெரிய அளவில் கைகொடுக்கும் என கருதப்படுகிறது. வேகப்பந்து வீச்சில், கிறிஸ் வோக்ஸ், உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி, முகமது சிராஜ் ஆகியோரையும் வளைத்துப் போட்டுள்ளனர்.
காயம் மற்றும் தடை காரணமாக உலகத்தரம் வாய்ந்த சில நட்சத்திர வீரர்கள் இந்தத் தொடரில் கலந்து கொள்ளவில்லை. ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க், தென் ஆப்பிரிக்காவின் ரபாடா ஆகியோர் காயம் காரணமாக விலகி உள்ளனர். அதேவேளையில் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் கேப்டவுன் டெஸ்டில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தால் லாபகரமான இந்தத் தொடரில் இம்முறை விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளனர். இதனால் ராஜஸ்தான், ஹைதராபாத் அணிக்கு இழப்புதான். எனினும் அந்த அணிகள் முறையே அஜிங்க்ய ரஹானே, கேன் வில்லியம்சன் ஆகியோரது தலைமையில் களமிறங்க ஆயத்தமாகிவிட்டது.
ராஜஸ்தான் அணி கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஏலத்தில் பென் ஸ்டோக்ஸ் (ரூ.12.5 கோடி), ஜெயதேவ் உனத்கட் (ரூ.11.5 கோடி) ஆகியோருக்காக மட்டும் அதிக தொகையை செலவிட்டது. இவைதவிர தேசிய அணிக்காக இதுவரை விளையாடாத இங்கிலாந்து கவுன்டி வீரர் ஜோப்ரா ஆர்ச்சரை ரூ.7.2 கோடிக்கும், கர்நாடக வீரர் கே.கவுதமை ரூ.6.2 கோடிக்கும் ஏலம் எடுத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இவர்களுடன் பிபிஎல் நட்சத்திர பேட்ஸ்மேன் டி’ஆர்சி ஷார்ட், ஸ்மித்துக்கு மாற்று வீரராக களமிறக்கப்பட்டுள்ள தென் ஆப்பிரிக்காவின் ஹென்ரிச் கிளாசென் ஆகியோரும் கணிசமான தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
2016-ம் ஆண்டு சாம்பியனான ஹைதராபாத் அணியில் வார்னர் இல்லாததால் டாப் ஆர்டரில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹெல்ஸ், ஷிகர் தவணுடன் இணைந்து நிரப்பக்கூடும். அந்த அணி கடந்த சீசனில் விளையாடிய வீரர்களின் ஒரு குழுவை தக்கவைத்துக்கொண்டுள்ளது நேர்மறையான விஷயமாக பார்க்கப்படுகிறது. மணீஷ் பாண்டே, யூசுப் பதான், கார்லோஸ் பிராத்வெயிட் ஆகியோரது வருகையால் அணியின் மிடில் ஆர்டர் வலுப்பெறக்கூடும். வேகப் பந்து வீச்சில் புவனேஷ்வர் குமார், சந்தீப் சர்மா ஆகியோரும் சுழலில் ஆப்கானிஸ்தானின் ரஷித் கான், வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹசன் ஆகியோரும் சிறந்த பங்களிப்பு செய்ய காத்திருக்கின்றனர்.
ரசிகர்களின் எதிர்பார்ப்புகளால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒருவித அழுத்தம் ஏற்பட்டுள்ளதாகவே கருதப்படுகிறது. தோனி தலைமை வகிக்கும் சென்னை அணியில் ஒட்டுமொத்தமாக இடம் பெற்றுள்ள வீரர்களில் 11 பேர் 30 வயதை கடந்தவர்களாக உள்ளனர். எனினும் இந்த சீசனை அந்த அணி அனுபவ வீரர்களை கொண்டே அணுகுகிறது. அனைவரது கவனமும் தோனி மீது திரும்பி உள்ளது. தனது கிரிக்கெட் வாழ்வில் நீண்ட காலமாக போட்டியை வெற்றிகரமாக முடித்து வைக்கும் திறனை கொண்டிருந்த அவர், மீண்டும் அந்த பணியில் திறம்பட செயல்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் மேலோங்கியுள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய ஐபிஎல் தொடரை சிறந்த களமாக தோனி பயன்படுத்தக்கூடும். சென்னை அணியின் மற்ற முக்கிய வீரர்களான சுரேஷ் ரெய்னா, டு பிளெஸ்ஸிஸ், டுவைன் பிராவோ ஆகியோர் உள்ளனர்.
கவனிக்கப்படக்கூடிய மற்றொரு அணியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் திகழ்கிறது. அந்த அணி கவுதம் காம்பீரின் சேவையில் இருந்து விலகி இம்முறை, திடீரென புகழ் பெற்றுள்ள தினேஷ் கார்த்திக் தலைமையில் தொடரை சந்திக்கிறது. கொல்கத்தா அணிக்காக 7 ஆண்டுகள் தொடர்ந்து விளையாடி காம்பீர் இரு முறை கோப்பையை வென்று கொடுத்திருந்தார். இதனால் அவரது வெற்றிடத்தை பூர்த்தி செய்ய வேண்டிய நெருக்கடி தினேஷ் கார்த்திக்குக்கு உள்ளது. இளம் வீரர்களான சுப்மான் கில், கமலேஷ் நாகர்கோட்டி, ஷிவம் மாவி ஆகியோர் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
இது ஒருபுறம் இருக்க அனைத்து சீசன்களிலும் பெரிய அளவில் சோபிக்காத டெல்லி டேர்டெவில்ஸ் அணியை இந்த சீசனில் வழிநடத்த உள்ளார் கவுதம் காம்பீர். இவரது அனுபமும், புதிய பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கின் ஆக்ரோஷ அணுகுமுறையும் கைகொடுக்கக்கூடும் . யு-19 நட்சத்திர வீரர்களான அபிஷேக் சர்மா, மன்ஜோத் கர்லா, பிருத்விஷா ஆகியோர் தங்களது திறனை வெளிப்படுத்தக் காத்திருக்கின்றனர்.
டெல்லி தனது முதல் ஆட்டத்தில் சந்திக்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நட்சத்திர வீரர்களை அதிகம் உள்ளடக்கியுள்ளது. கிறிஸ் கெய்ல், யுவராஜ் சிங் ஆகியோரிடம் இருந்து சிறந்த ஆட்டத்தை வெளிக் கொண்டுவருவது அணி நிர்வாகத்துக்கு பெரிய சவாலாக இருக்கக்கூடும். கேப்டனாகவும், முதன்மை சுழற்பந்து வீச்சாளராகவும் உள்ள அஸ்வினுக்கும் நெருக்கடி காத்திருக்கிறது. இந்திய அணியில் குறுகிய வடிவிலான போட்டிகளில் தனது இடத்தை இழந்துள்ள அஸ்வின், உயரிய திறனை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ஆரோன் பின்ச், கே.எல்.ராகுல், டேவிட் மில்லர் ஆகியோரும் மட்டையை சுழற்ற ஆயத்தமாக உள்ளனர்.
ஐபிஎல் வராலாற்றில் வெற்றிகரமாக வலம் வரும் நடப்பு சாம்பினான மும்பை அணி 4-வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் நீண்ட கால கேப்டனான ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்குகிறது. அனுபவ சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங்கை இழந்துள்ளது மட்டுமே சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஆனால் அவரது இடத்தை கிருனல் பாண்டியா நிரப்பக்கூடும். ஹர்திக் பாண்டியா, கெய்ரன் பொல்லார்டு ஆகியோர் தங்களது அதிரடி பேட்டிங்காலும், பும்ரா தனது யார்க்கர்களாலும் எதிரணியை புரட்டிப் போட தயாராக உள்ளனர்.
தொடக்க விழாவையொட்டி கண்கவர் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகர்களான ஹிருத்திக் ரோசன், வருண் தவண் ஆகியோரது நடன நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 5 மணி அளவில் தொடங்கும் கலை நிகழ்ச்சிகள் சுமார் 90 நிமிடங்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் மொத்த பரிசுத் தொகை ரூ.50 கோடி. இதில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.26 கோடி வழங்கப்படும். 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.13 கோடியும், பிளே ஆப் சுற்றுடன் வெளியேறும் இரு அணிகளுக்கு தலா ரூ.9 கோடி வழங்கப்படும். இவை தவிர மீதி உள்ள தொகை மற்ற அணிகளுக்கு பிரித்து வழங்கப்படும்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.