தினேஷ் கார்த்திக் வங்கதேசத்துக்கு எதிராக பிரமிப்பூட்டும் அதிரடியில் இறுதிப் போட்டியில் எட்டே பந்துகளில் வங்கதேச அணியின் கோப்பைக் கனவை முறியடித்து இந்திய அணிக்கு அபார வெற்றி தேடித்தந்தார், இதனையடுத்து தோனியின் பினிஷிங் திறமைகள் பற்றி கார்த்திக்குடன் ஒப்பீடுகள் எழுந்து வருகின்றன.
தோனி எந்த டவுனில் இறங்குவார்?
தோனியும் கடந்த சில போட்டிகளாக குறைந்த ஓவர் போட்டிகளில் சரிவர ஆட முடியாமல் போயுள்ளது. இந்நிலையில் அவருக்கும் தன்னை நிரூபிக்க வேண்டிய தேவையுள்ளதாகவே கிரிக்கெட் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
தோனி கடைசியாக ஆகஸ்ட் 2016-ம் ஆண்டில் மே.இ.தீவுகளுக்கு எதிராக புளோரிடாவில் நடைபெற்ற டி20 போட்டியில் கேப்டன்சி செய்ததோடு சரி, அந்தப் போட்டியில் பிராவோ பந்தை ஷார்ட் தேர்ட்மேனில் கேட்ச் கொடுக்க இந்திய அணி தோல்வியடைந்தது.
அதன் பிறகு தற்போது சென்னை அணிக்காக தலைமைப்பணிக்குத் திரும்பியுள்ளார் தோனி. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4 ஒருநாள் போட்டிகளில் ஒருமுறை மட்டுமே 15 ரன்களைக் கடந்துள்ளார். அந்தத் தொடர் முடிவில் ஸ்ட்ரைக் ரேட் 80 தான். ஆனால் தென் ஆப்பிரிக்காவில் டி20 போட்டியில் தோனி 28 பந்துகளில் 4 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 52 ரன்கள் விளாசியது நினைவிருக்கலாம்.
இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் தன் வழக்கமான டவுன் ஆர்டரிலிருந்து சற்றே முன்னமேயே களமிறங்குவார் என்று பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் தோனி 6-ம் நிலையில் களமிறங்கிய போது அவரது சராசரி 27.50 ஸ்ட்ரைக் ரேட் குறைவான 113%தான். 4ம் நிலையில் தோனி இறங்கியபோது சராசரி 35.83, ஸ்ட்ரைக் ரேட் 141 ஆகும். 5-ம் நிலையில் தோனி இறங்கிய போது சராசரி 46.12, ஸ்ட்ரைக்ரேட் 147.72.
எனவே புள்ளி விவரங்கள் அடிப்படையில் தோனி 5-ம் நிலையில் களமிறங்குவதே சரியாக இருக்கும். மேலும் அவரிடம் ஸ்ட்ரோக்குகள் குறைந்து விட்டன, இன்று பவுலர்கள் விரல்களின் மூலம் வீசுவது ஸ்லோ பவுன்சர் என்றேல்லாம் தேறியிருக்கும் நிலையில் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வைடாக ஃபுல் லெந்தில் வீசினால் தோனி 1 ரன் எடுக்கவே திணறுவதைத்தான் பார்த்து வருகிறோம். பவர் ப்ளே இருக்கும் போது தொடக்கத்தில் இறங்கி நாலு சாத்து சாத்தினால் அவரது பழைய அதிரடி அவருக்கு மீண்டும் கை கூடலாம்.
சென்னை அணியில் முரளி விஜய், டுபிளெசிஸ், மார்க் உட் நீங்கலாக ஒருவரும் அந்தந்த நாட்டு டெஸ்ட் அணியில் இல்லாதவர்கள். 11 வீரர்கள் 30 வயதுக்கும் அதிகமானவர்கள். ஷேன் வாட்சன் பிபிஎல் மற்றும் பாகிஸ்தான் சூப்பர் லீகில் பார்முக்கு வந்தார். முரளி விஜய் பெரிய ஹிட்டர் என்பதை விட ரன் சேர்ப்பவர் என்றே கூற வேண்டும், டுபிளெசிஸ் நிறைய டெஸ்ட் போட்டிகளில் ஆடிவிட்டு வருகிறார், எனவே ஒரு மந்தமான தொடக்கம் அவ்வளவு பார்மில் இல்லாத தோனி, ரெய்னாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும்.
கேதார் ஜாதவ்வும் சமீபமாக உயர்மட்ட கிரிக்கெட்டில் ஆடவில்லை. ஜடேஜாவை பேட்டிங்கில் நம்பலாம் என்று தெரிகிறது. ராயுடுவை நம்ப முடியாது. சென்னை பேட்டிங்கை விட பவுலிங் நன்றாக உள்ளது, மார்க் உட், லுங்கி இங்கிடி, இம்ரான் தாஹிர் இருந்தாலும் 4 வெளிநாட்டு வீரர்கள்தான் பயன்படுத்த முடியும் எனும்போது டுபிளெசிஸ் வாட்சன் அணியில் இடம்பெறுவார்கள், பவுலிங்கில் இம்ரான் தாஹிர் இருப்பார், மார்க் உட்டோ அல்லது லுங்கி இங்கிடி ஆகிய இருவரில் ஒருவரைத்தான் பயன்படுத்த முடியும்,. ஜடேஜா, ஹர்பஜன் கூடுதல் பலம்..
மாறாக மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா ஒரு பெரிய பார்மில் இருக்கிறார், அதிரடி வீரர் எவின் லூயிஸ் தொடக்கத்தில் ஒரு கிறிஸ் கெய்ல் போன்ற சரவெடி வெடிப்பவர். டுமினி, ஹர்திக் பாண்டியா, குருணால் பாண்டியா போன்ற ஆல்ரவுண்டர்கள். தவிரவும் அனுபவமிக்க கெய்ரன் பொலார்ட் இருக்கிறார், பொலார்டின் பீல்டிங் ஒரு பெரிய பலம்.
சென்னை அணி (உத்தேசமாக): விஜய், வாட்சன், டுபிளெசிஸ், ரெய்னா, தோனி, ஜடேஜா, ஜாதவ்/ராயுடு, இம்ரான் தாஹிர், ஹர்பஜன் சிங், டிவைன் பிராவோ, ஷர்துல் தாக்கூர்
மும்பை அணி (உத்தேசமாக): ரோஹித் சர்மா, எவின் லூயிஸ், இஷான் கிஷன், டுமினி/பென் கட்டிங், ஹர்திக் பாண்டியா, குருணால் பாண்டியா, பொலார்ட், மிட்செல் மெக்லினாகன், பும்ரா, தனஞ்ஜயா, சங்வான்/முஸ்தபிசுர் ரஹ்மான்
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.