IPL 2018:ஆடிப்போன மும்பை இந்தியன் அணி?ஹர்பஜனை இழந்து வாடி வருகிறோம் …!மிகப்பெரிய அனுபவம் மும்பையை விட்டுச்சென்றது …!
மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகர் அனில் கும்ப்ளே அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் இல்லாத இடத்தை மும்பை இந்தியன்ஸ் அணி உணரும் என்று தெரிவித்தார்.
11-வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் போட்டிகள் நாளை மும்பையில் தொடங்குகிறது. வான்ஹடே மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
கடந்த 2 ஆண்டுகள் தடைக்குப் பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் போட்டித்தொடருக்குள் வருவதால், அந்த அணி மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பு வைத்துள்ளனர். அதேசமயம், மும்பை இந்தியன்ஸ் அணியில் கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து இடம் பெற்றுவந்த அனுபவ வீரரும் ஆஃப் ஸ்பின்னரான ஹர்பஜன் சிங் இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மாறியுள்ளார். ஆதலால், இது சென்னை அணிக்கு பெரிய பலமாக அமைந்துள்ளது.
இது குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகர் அனில் கும்ப்ளே இன்று தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,”மும்பை இந்தியன்ஸ் அணி இந்த முறை அனுபவம் வாய்ந்த சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் இல்லாததை நிச்சயமாக உணரும். அதேசமயம், குர்னல் பாண்டியா மிகச்சிறந்த ஆல்-ரவுண்டர், அவர்தான் இந்த முறை மற்ற சுழற்பந்து வீச்சாளர்களை வழிநடத்த வேண்டும்.
அணியில் லெக் ஸ்பின்னர் ராகுல் இருந்தபோதிலும், அவர் அனுபவமற்றவர். ஹர்பஜன் போன்ற அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லாதது அணிக்கு மிகப்பெரிய இழப்பாகும். ஹர்பஜனால் பேட்டிங்கில் கூட சிறப்பாகச் செயல்பட முடியும்.
வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்திபிஜுர் ரஹிம், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரருக்கு தொடக்க ஓவர்களை நன்றாக வீசும பொறுப்பு இருக்கிறது. அதேசமயம், மல்லிங்காவின் பந்துவீச்சையும் இந்த முறை மும்பை இந்தியன்ஸ் அணி இழந்துவிட்டது. ஆனால், அவர் வேகப்பந்துவீச்சு ஆலோசகராக மாறிவிட்டார்.
19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் இடம் பெற்றிருந்த வீரர்கள் பலர் ஐபிஎல் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் தங்களை மென்மேலும் வளர்த்துக்கொள்ளவும் இந்திய அணியில் இடம்பிடிக்கவும் இது மிகச்சிறந்த வாய்ப்பாக அமையும்.
குறிப்பாக பிரித்திவ் ஷா, நாகர்கோட்டி ஆகியோர் வாய்ப்பை நன்கு பயன்படுத்த வேண்டும். ஹர்திக் பாண்டியா, பும்ரா, ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் ஐபிஎல் மூலமே அணியில் இடம் பெற்றவர்கள். இவர் மீது மக்கள் ஒரு விதமான எதிர்பார்ப்புடனே இருப்பார்கள். இவர்களும் இந்த சீசனில் சிறப்பாக செயல்படவேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.
ஆதலால், உள்நாட்டு கிரிக்கெட்டில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு வீரரும், ஐபிஎல் போட்டியில் கலந்துகொள்ள தங்களின் திறனையும், திறமையையும் வெளிப்படுத்த நல்ல களமாகும். இது இந்திய அணியில் இடம் பிடிப்பதற்கு சிறந்த சூழலை உருவாக்கிக் கொடுக்கும் என்று ‘அனில் கும்ப்ளே தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.