IPL 2018:அந்த மாதம் எப்டி ஓகேயானது?இந்த மாதம் ஏன் ஓகே ஆகல?தோல்வியால் அஷ்வின் புலம்பல்
நேற்று இரவு புனேவில் ஐபிஎல் போட்டியின் கடைசி 56வது லீக் ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் இடையே நடைபெற்றது.
டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.
பேட்டிங் ஆட களமிறங்கிய பஞ்சாப் அணியின் கெய்ல் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார், பின்ச் 4 ரன்களிலும், ராகுல் 7 ரன்களிலும் அவுட் ஆகி தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. இருப்பினும் 4வது விக்கெட்டுக்கு ஜோடியாக மனோஜ் திவாரி, மில்லர் 60 ரன்களைச் சேர்த்தனர்.
அடுத்து வந்த கருண் நாயர் அதிரடியாக விளையாடி 26 பந்துகளில் 5 சிக்சர்கள் 3 பவுண்டரிகள் உட்ப 54 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோர் உயரக் காரணமாக இருந்தார்.
இருப்பினும் சென்னை அணி கடைசி ஓவர்களில் சிறப்பாகப் பந்து வீசியதால் பஞ்சாப் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்கள் எடுத்தது.
சென்னை அணி தரப்பில் என்கிடி 4 விக்கெட்டுகளையும், தாகூர், பிராவோ 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா, சஹர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
பின்னர் பேட்டிங் ஆட வந்த சென்னை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. அம்பாதி ராயுடு 1 ரன்னில் அவுட் ஆனார். டுபிளிசிஸ் 14 ரன்களிலும், சாம் பில்லிங்ஸ் ரன் ஏதும் எடுக்காமலும் அவுட் ஆனார்கள்.
5வது ஓவரில் 27 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து சென்னை அணி தடுமாறியது. அடுத்து வந்த ஹர்பஜன் சிங் ஓரளவிற்கு விளையாடி ஒரு சிக்சர், 2 பவுண்டரிகள் அடித்து கொஞ்சம் ஸ்கோரை உயர்த்தினார். அவர் அவுட் ஆன பின் வந்த தீபக் சஹர் அதிரடியாக விளையாடி 20 பந்துகளில் 3 சிக்சர்கள், 1 பவுண்டரி உட்பட 39 ரன்கள் எடுத்தார். அவருடைய ஆட்டத்தால் சென்னை அணிக்கு தெம்பு வந்தது.
பின்னர் சுரேஷ் ரெய்னா, தோனி ஜோடி சென்னை அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. ரெய்னா 48 பந்துகளில் 2 சிக்சர்கள், 4 பவுண்டரிகள் உட்பட 61 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார்.
சென்னை அணி 19.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வருட ஐபிஎல் போட்டியின் முதல் ஆட்டத்தில் மும்பை அணிக்கு எதிராக வெற்றி பெற்ற சென்னை அணி, கடைசி ஆட்டத்தில் பஞ்சாப் அணியையும் வென்று வெற்றிக் களிப்புடன் அவர்களது லீக் ஆட்டங்களை முடித்துள்ளது.
4 ஓவர்களில் 10 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்திய என்கிடி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
பின்னர் பஞ்சாப் கேப்டன் அஸ்வின் கூறும்போது, ‘நாங்கள் சரியாக பேட்டிங் செய்யவில்லை. பவர் பிளேயில் 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். கருண் நாயர் சிறப்பாக ஆடினார். இருந்தும் 20-30 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம். சில கேட்ச்களை கோட்டைவிட்டோம். எங்களுக்கு ஏப்ரல் மாதம் எங்களுக்கு டீசன்டாக அமைந்தது. ஆனால் மே மாதம் பயங்கரமாக மாறிவிட்டது. மொகாலியில் நடந்த போட்டிகளில் கே.எல்.ராகுலும் கிறிஸ் கெயிலும் அதிக ரன்கள் குவித்தார்கள். நடுவரிசை வீரர்கள் சரியாக ஆடவில்லை. சரிசெய்ய முயன்றோம். எதிர்பார்த்தபடி அமையவில்லை. அதுதான் இரண்டாம் பாதியில் எங்களை பாதித்துவிட்டது.எங்கள் அணியில்தான் அதிக விக்கெட் வீழ்த்தியதற்கான பர்பிள் தொப்பி வைத்திருக்கும் ஆண்ட்ரு டை இருக்கிறார். இருந்தும் நாங்கள் சரியாக செயல்படவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பாக செயல்பட்டது. இந்த தொடர் முழுவதும் கே.எல்.ராகுல் சிறப்பாக ஆடினார். அங்கித்தும் நன்றாக பந்துவீசினார்’ என்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.