டிவைன் பிராவோ தன் டி20 வாழ்வில் 50 ரன்களைக் கொடுத்தது இது 4வது முறையாகும். 2007 உலகக்கோப்பை டி20-யில் பிராவோவை வங்கதேசம் 2 ஓவர்களில் 34 ரன்கள் விளாசியதே பிராவோவின் படுமோசமான பந்து வீச்சாகும்.
பிராவோ நேற்று மட்டும் 7 சிக்சர்கள் விளாசப்பட்டார். இதற்கு முன்பாக 5 சிக்சர்கள்தான் அதிகபட்சமாக விளாசப்பட்டிருந்தார்.
இது மட்டுமல்லாது ஐபிஎல் வரலாற்றில் அதிக சிக்சர்கள் விளாசப்பட்ட பவுலர் என்ற எதிர்மறைச் சாதனைக்கும் பிராவோ சொந்தக்காரரானார், இதுவரை வினய் குமாரைத்தான் 104 சிக்சர்கள் புரட்டி எடுத்துள்ளனர், வினய் குமாரை நேற்று கொடுத்த 7 சிக்சர்கள் மூலம் பிராவோ பின்னுக்குத் தள்ளி 107 சிக்சர்கள் வழங்கிய அபூர்வ சிந்தாமணியானார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை 200க்கும் மேலான இலக்கை வெற்றிகரமாக விரட்டியது நேற்று 2வது முறையாகும். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிதான் இதில் முன்னிலை வகிக்கிறது, இந்த அணி 3 முறை 200க்கும் மேற்பட்ட இலக்கை வெற்றிகரமாக விரட்டியுள்ளது.
இந்த ஐபிஎல் கிரிக்கெட்டில் இதுவரை நடந்த 5 போட்டிகளுமே 2வதாக பேட் செய்த அணி வெற்றி பெற்றுள்ளது.
நேற்றைய போட்டியில் மொத்தம் 31 சிக்சர்கள் விளாசப்பட்டன. இது ஏற்கெனவே உள்ள ஐபிஎல் சாதனையை சமன் செய்துள்ளது.
7ம் நிலையில் ரஸல் எடுத்த 88 ரன்கள் ஐபிஎல் கிரிக்கெட்டில்தான் அதிகபட்சமானது, சர்வதேச கிரிக்கெட்டில் ஆப்கான் வீரர் மொகமது நபி 7ம் நிலையில் ஒரு முறை அயர்லாந்தைப் புரட்டி எடுத்து 89 ரன்கள் விளாசியது தனிக்கதை.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக அதிகபட்ச இலக்கை விரட்டி வெற்றி பெற்ற அணி என்ற சாதனையையும் சென்னை சூப்பர் கிங்ஸ் நிகழ்த்தியது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.