ஐ.பி.எல் தொடக்க விழா ரத்து!!செலவாகும் பணத்தை வீரமரணடைந்த சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் குடும்பங்களுக்கு அளிக்க முடிவு !!பிசிசிஐ அறிவிப்பு
- ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
- ஐ.பி.எல் தொடக்க விழாவை ரத்து செய்வதாக பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஐபிஎல் 11வது சீசனை சென்னை அணி வென்றது. இரண்டு ஆண்டுகள் தடைக்கு பிறகு தோனி தலைமையில் மீண்டும் களமிறங்கிய சென்னை அணி, மூன்றாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது.
இந்த வருடம் நடைபெறும் ஐபிஎல் போட்டிக்காக தங்களது அணியில் களமிறங்க அணிகள் வீரர்களை ஏலம் எடுத்தது.
அதேபோல் 12வது ஐபிஎல் தொடர் 2019 மார்ச் மாதம் 23ம் தேதி முதல் தொடங்கும் என்று ஐபிஎல் நிர்வாகக்குழு தெரிவித்தது.12வது ஐபிஎல் தொடர் இந்தியாவிலேயே நடைபெறும் என்றும் தெரிவித்தது.
பின்னர் ஐ.பி.எல் 2019-ஆம் ஆண்டின் முதல் போட்டி சென்னையில் நடைபெறும் என அறிவிப்பு வெளியிட்டது ஐ.பி.எல் நிர்வாகம்.முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணிகள் மோதுகின்றது.முதல் 17 போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டது.
இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர்.தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இதனால் அங்கு பதற்றம் நிலவியுள்ளது.இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஐ.பி.எல் தொடக்க விழாவை ரத்து செய்வதாக பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக பிசிசிஐ நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய் கூறுகையில், இந்தாண்டு ஐபிஎல் போட்டிக்கு தொடக்க விழா இல்லை. அதற்கு செலவாகும் பணத்தை புல்வாமா தாக்குதலில் வீரமரணடைந்த சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் குடும்பங்களுக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் உலக கோப்பை போட்டியில் இந்தியா அணி பாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்து மத்திய அரசுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று பிசிசிஐ நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய் தெரிவித்துள்ளார்.