விரைவில் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்?அடித்து கூறும் ஐசிசி!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) , அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் 2028-ம் ஆண்டு நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.
கொல்கத்தாவில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) 5 நாள் நிர்வாக ரீதியிலான கூட்டம் நடந்தது. கடைசி நாளான இன்று ஐசிசி தலைமை நிர்வாக அதிகாரி டேவ் ரிச்சார்ட்சன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:”ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் விளையாட்டைச் சேர்க்க ஐசிசி தீவிரமாக முயன்று வருகிறது. அதற்கான நடவடிக்கைகளை வேகமாக எடுத்து வருகிறோம். எங்கள் முயற்சிகள் சரியான திசையில் சென்றால், 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் நிச்சயம் கிரிக்கெட் இடம்பெறும்.
கடந்த 1900-ம் ஆண்டு பாரீஸில் நடந்த கோடைகால ஒலிம்பிக் போட்டியில் மட்டுமே கிரிக்கெட் இடம் பெற்றது அதன்பின் இன்னும் இடம்பெறவில்லை.
2024-ம் ஆண்டு நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டைச் சேர்க்கக் கோரும் மனுவை சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தில் அளிக்கும் காலக்கெடு முடிந்துவிட்டது. ஆதலால், 2028ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியில் சேர்க்க தீவிரமாக முயற்சிகள் நடந்து வருகின்றன. எங்களின் பேச்சுவார்த்தை சிறப்பாகச் செல்லும் பட்சத்தில் 2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் இடம் பெறும்.”இவ்வாறு ரிச்சர்ட்சன் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.