முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 325 ரன்கள் சேர்த்தது. டிரஸ்கோத்திக் 109, நாசர் ஹூசைன் 115 ரன்கள் சேர்த்தனர்.
இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு சேவாக்(45), கங்குலி(60) ஸ்திரமான தொடக்கம் அளித்தனர். 15 ஓவர்களுக்கு 115 ரன்கள் 2 விக்கெட்டுகள் என்ற வலுவான நிலையில் இருந்தது. ஆனால், அடுத்து வந்த தினேஷ் மோங்கியா, சச்சின், திராவிட் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் ரசிகர்கள் இழந்தனர்.
ஆனால், 6-வது விக்கெட்டுக்கு முகமது கைப், யுவராஜ் சிங் ஜோடி ஆட்டத்தின் போக்கை மாற்றியது. யுவராஜ் சிங் 69 ரன்களில் ஆட்டமிழந்தார். முகமது கைப் 87 ரன்களுடன், ஹர்பஜன் 15 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெற வைத்தனர்.
இந்த வெற்றி கிடைத்தவுடன் பெவிலியனில் இருந்த கங்குலி மைதானத்துக்குள் வந்து தனது சட்டையைக் கழற்றி சுற்றி ஊர்வலமாக வந்தார். இந்த சம்பவம் அனைவரின் நினைவிலும் இருக்கிறது.
இது போட்டி குறித்து சமீபத்தில் நிகழ்ச்சியில் விராட் கோலியும், சவுரவ் கங்குலியும் கலந்துரையாடினார்கள். போரியா மஜூம்தார் எழுதிய ‘லெவன் காட்ஸ் அன்ட் பில்லியன் இன்டியன்ஸ்’ என்ற புத்தக வெளியீட்டுவிழா கொல்கத்தாவில் சமீபத்தில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய கங்குலி, ‘நாட்வெஸ்ட் சீரியஸ் தொடரை நாங்கள் வென்றபோது, நான் சட்டையைக் கழற்றி சுற்றினேன். ஆனால், 2019ம் ஆண்டு உலகக்கோப்பையை விராட் கோலி தலைமை வென்றால், லண்டன் ஆக்ஸ்போர்ட் தெருவை சட்டையில்லாமல் வலம் வருவார் ஆதலால் கேமிராக்களை தயாராக வைத்திருக்க வேண்டும். கோலிக்கு சிக்ஸ்பேக் இருக்கிறது. ஆதலால், அவர் சட்டை கழற்றாமல் இருக்கமாட்டார்’ என்று நகைச்சுவையாகத் தெரிவித்தார்.
அதற்கு பதில் அளித்து விராட் கோலி கூறியதாவது,லண்டனில் 2019-ம் ஆண்டு நடக்கும் உலகக்கோப்பையை இந்திய அணி வென்றால் சட்டையைக் கழற்றி நிச்சயம் ஆக்போர்ட் தெருவில் வலம் வருவேன். ஆனால் என்னுடன், ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிர்த் பும்ராவும் உடன் வருவார்கள். நான் மட்டும் தனியாக வலம் வருவேன் என்று நினைக்கவில்லை. நிச்சயம் ஹர்திக் பாண்டியா என்னுடன் வருவார் என்பதற்கு 120 சதவீதம் உறுதி. உடலில் சிக்ஸ் பேக்ஸ் வைத்துள்ள பும்ராவும் உடன் வருவார் என்பதில் சந்தேகமில்லை.
நாட்வெஸ்ட் தொடரின் இறுதிப்போட்டி நடக்கும்போது எனக்கு 13 வயது இருக்கும். இந்தியா சேஸிங் செய்யும்போது, கங்குலி, சேவாக் ஆட்மிழந்தபின், சச்சின், டிராவிட் என முக்கிய விக்கெட்டுகள் வீழ்ந்தவுடன் நான் நம்பிக்கை இழந்து தூங்கச் சென்றுவிட்டேன்.
எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. என்னை என் தாய் காலையில் எழுப்பினார்கள், இந்தியா நாட்வெஸ்ட் சீர்ஸ் கோப்பையை வென்றுவிட்டது எழுந்திரு என்றார்கள். நான் பொய் சொல்லாதீர்கள். எப்படி வென்றிருக்க முடியும் என்றேன்.
அதன்பின் யுவராஜ் சிங், முகமது கைப் நிலைத்து விளையாடியதை கூறியபின்தான் நான் நம்பி மகிழ்ச்சி அடைந்தேன்.இவ்வாறு கோலி தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.