இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.121 கோடி அபராதம்!அமலாக்கத்துறை அதிரடி!
பி.சி.சி.ஐ. மற்றும் அதிகாரிகளுக்கு 2009-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் நடந்த முறைகேடுகளுக்காக அமலாக்கத்துறை ரூ.121 கோடி அபராதம் விதித்துள்ளது.
இந்தியாவில் ஐபிஎல் தொடர் கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. பிசிசிஐ நடத்தும் இந்த போட்டிகளில் உலகின் பல நாடுகளை சேர்ந்த முன்னணி கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இதுதான் உலக அளவில் அதிக செலவில் நடத்தப்படும் லீக் தொடராகும்.
2009-ம் ஆண்டு நடந்த இந்த தொடரின் 2-வது சீசன், நாடாளுமன்ற தேர்தல் காரணமாக தென்னாப்ரிக்காவில் நடத்தப்பட்டது. அப்போது அந்நிய செலாவணி சட்டத்தை மீறியதாக பிசிசிஐ மீது புகார் எழுந்தது. அதன்படி ரூ.243 கோடி பணப்பறிமாற்றத்தில் விதிமீறல் நடந்ததாக அமலாக்கத்துறை கண்டுபிடித்தது.
இதையடுத்து, அமலாக்கத்துறை ரூ.121 கோடி அபராதம் விதித்துள்ளது. பிசிசிஐக்கு ரூ.82,86 கோடி, முன்னாள் பிசிசிஐ தலைவர் சீனிவாசனுக்கு ரூ.11.53 கோடி, முன்னாள் ஐபிஎல் தலைவர் லலீத் மோடிக்கு ரூ.10.65 கோடி, முன்னாள் ஐபிஎல் பொருளாளர் பாண்டோவுக்கு ரூ.9.72 கோடி என மொத்தம் ரூ.121.56 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 45 நாட்களுக்குள் இந்த அபராதத் தொகையை செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.