IPL RCB vs PBKS: டுபிளெஸ்ஸி, கோலி அபாரம்; பஞ்சாப் அணிக்கு இதுதான் இலக்கு.!
ஐபிஎல் தொடரின் இன்றைய RCB vs PBKS ஆட்டத்தில் பெங்களூரு அணி, அதிரடியாக பேட் செய்து 174/4ரன்கள் குவிப்பு.
16-வது ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறும் வேளையில், 3.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள், மொஹாலியின் ஐஎஸ் பிந்திரா ஸ்டேடியத்தில் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பஞ்சாப், முதலில் பவுலிங் தேர்வு செய்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூரு அணியில் விராட் கோலி மற்றும் டுபிளெஸ்ஸி நல்ல தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 137 ரன்கள் குவித்த நிலையில், கோலி 59 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய மேக்ஸ்வெல்(0) முதல் பந்தில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
மறுபுறம் அதிரடியாக விளையாடி சிக்ஸர் மற்றும் பவுண்டரிகள் என பறக்கவிட்ட டுபிளெஸ்ஸி(84 ரன்கள்) எடுத்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். 200 ரன்களுக்கு மேல் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கோலி, டுபிளெஸ்ஸி விக்கெட்டுக்கு பிறகு அணியின் ஸ்கோர் வேகத்தில் தொய்வு ஏற்பட்டது.
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தினேஷ் கார்த்திக் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். முடிவில் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் மட்டுமே குவித்தது. பஞ்சாப் அணி தரப்பில் ஹர்ப்ரீத் ப்ரார் 2 விக்கெட்களை சாய்த்தார்.