ஐபிஎல் இறுதி போட்டி ரிசர்வ் டே! இந்த டிக்கெட் இருந்தால் மட்டுமே அனுமதி!
எம்-டிக்கெட் அல்லது டிஜிட்டல் டிக்கெட் இருந்தால் அனுமதிக்கப்படுமா? ஐபிஎல் இறுதிப் போட்டிக்கான டிக்கெட் நடைமுறை குறித்த முக்கிய அறிவிப்பு..
நடப்பாண்டு 16-வது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுவதாக இருந்த நிலையில், தொடர் மழையால் ரிசர்வ் தினமாக அறிவிக்கப்பட்டு, இறுதிப்போட்டி இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ரிசர்வ் நாள்:
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று ரசிகர்கள் இருந்த நிலையில், மழையால் போட்டி நடைபெறவில்லை. இந்தியன் பிரீமியர் லீக்கின் 2023 சீசனை பொறுத்த வரையில் அனைவருக்கும் இது ஏமாற்றமளிக்கும் நாளாக இருந்தது. மழையின் காரணமாக 16வது சீசன் இறுதிப் போட்டியை ரிசர்வ் நாளாக இன்று தள்ளி வைக்கப்பட்டது. நேற்று 2 மணிநேரம் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டாலும், இரவு 10:30 மணி வரை கிட்டத்தட்ட 4 மணிநேரம் மழை பெய்தது, இதனால் ஐந்து ஓவர் போட்டிக்கு கூட ஆடுகளத்தை தயார் செய்ய முடியவில்லை.
பாதிக்கப்பட்ட ரசிகர்கள்:
வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அணி நிர்வாகம் பெரிய இறுதிப் போட்டிக்கு தயாராகிவிட்டு, பின்னர் போட்டி தள்ளி வைத்ததில் விரக்தியடைந்தாலும், இதில் அதிகம் பாதிக்கப்பட்டது ரசிகர்கள் தான். ஐபிஎல் இறுதி போட்டிக்காக நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பலர் பயணம் செய்து, அகமதாபாத் வந்த நிலையில், போட்டி ஒத்திவைக்கப்பட்டதால் அவர்களது திட்டங்கள் அனைத்தும் பாழாகியது.
The world’s best stadium in Gujarat when it rains. #IPL2023Final #IPL2023 #GTvsCSK #narendramodistadium pic.twitter.com/K3aulcp8aS
— ayushman (@areywaahayush) May 28, 2023
மறு நுழைவு செயல்முறை:
அதுமட்டுமல்லாமல், மழையால் முழங்கால் வரை தண்ணீர் தேங்கி நின்றதால் மனமுடைந்து மைதானத்தை விட்டு வெளியேறிய ரசிகர்களை இறுதி போட்டிக்கான தங்களது physical டிக்கெட்டுகளை அப்படியே, பாதுகாப்பாக வைத்திருக்குமாறு பிசிசிஐ வலியுறுத்தியது. இந்த நிலையில், ரிசர்வ் நாளில், ஐபிஎல் 2023 இறுதிப் போட்டிக்கான மறு நுழைவுக்கான டிக்கெட் குறித்த விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது ஐபிஎல் நிர்வாகம்.
கிழிந்திருந்தால் அனுமதி இல்லை:
இதுதொடர்பாக ஐபிஎல் நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அதிகாரப்பூர்வ ஐபிஎல் நுழைவுச் சீட்டு தொடர்பாக செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவற்றை படங்கள் மூலம் விளக்கமளித்துள்ளது. முழுமையான டிக்கெட் வெளிப்படையாகவே அனுமதிக்கப்படுகிறது. இருப்பினும், ஒரு முழு டிக்கெட், அனைத்தும் துண்டுகளாக கிழிந்திருந்தால் ஏற்றுக்கொள்ளப்படாது.
விவரங்கள் முக்கியம்:
ஒரு முழுமையான டிக்கெட்டில் நுழைவு வாயில் எண், பகுதி, வரிசை எண் மற்றும் இருக்கை எண் பற்றிய அனைத்து விவரங்களும் இருக்க வேண்டும். மேலும், கிழிந்த டிக்கெட்டில் இந்த விவரங்கள் அனைத்தும் அப்படியே இருந்தால் அனுமதிக்கப்படும். அதாவது, ஒரு டிக்கெட் கிழிந்திருப்பின், ஆனால், குறிப்பிட்ட விவரங்கள் படிக்கச் கூடியவையாக இருந்தால் அனுமதிக்கப்படுவார்கள். எனவே, முழு விவரங்களுடன் கூடிய டிக்கெட்டுகளுடன் மட்டுமே ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
physical டிக்கெட் அவசியம்:
மொபைல் போனில் எம்-டிக்கெட் அல்லது டிஜிட்டல் டிக்கெட், அதாவது ஆன்லைன் டிக்கெட் மட்டுமே காண்பித்து இறுதிப் போட்டிக்கு நுழைய அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மிக முக்கியமான அம்சம் இறுதிக் குறிப்பு ஆகும், அதாவது, physical டிக்கெட் இல்லாமல் நுழைய முடியாது என்பதாகும்.
மேலும், உள்ளே நுழைந்தவுடன் டிக்கெட்டை இழந்த அல்லது டிக்கெட்டை வீசிய ரசிகர்கள், இன்று மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என திட்டவட்டமாக ஐபிஎல் நிர்வாகம் கூறியுள்ளது. இதனால், போட்டியை காண வரும் ரசிகர்கள் கண்டிப்பாக physical டிக்கெட்டுடன் வர வேண்டும் அவசியமாகும். போட்டி வைக்கப்பட்டதால் இன்று போட்டிக்கான பார்வையாளர்களின் எண்ணிக்கை, பயணம் மற்றும் மற்ற காரணங்களால் குறையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
Ready to re-attend the #TATAIPL 2023 #Final today?
Here’s everything you need to know about your Physical tickets ????️
Note – There will be no entry without physical tickets pic.twitter.com/B1ondsXvgP
— IndianPremierLeague (@IPL) May 29, 2023