IPL CSKvsRCB: சென்னை அணி வீரர்களின் அசுர பேட்டிங்; ஆர்.சி.பிக்கு 227 ரன்கள் இலக்கு.!
ஐபிஎல் தொடரின் இன்றைய CSK vs RCB போட்டியில் முதலில் பேட் செய்து அதிரடியாக விளையாடி 226/6 ரன்கள் குவிப்பு.
16-வது ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பெங்களூரு சின்னசுவாமி ஸ்டேடியத்தில் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டுபிளெஸ்ஸி, முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தார்.
இதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணியில், தொடக்க வீரர் ருதுராஜ் 3 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் இறங்கிய ரஹானே(37 ரன்கள்) கான்வே உடன் இணைந்து அதிரடியாக ரன்கள் குவித்தார். மறுபுறம் கான்வே(83 ரன்கள்) தன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகள் என அரைசதம் கடந்தார்.
அதன்பின் களமிறங்கிய ஷிவம் துபே, கான்வே உடன் ஜோடி சேர்ந்து பந்துகளை பவுண்டரிகளுக்கு பறக்கவிட்டார். அதேநேரத்தில் அதிரடியாக விளையாடி வந்த கான்வே 83 ரன்களில் ஹர்ஷல் பட்டேல் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
மறுபுறம் துபே தனது அதிரடி அரைசதத்தை நிறைவு செய்தார். துபே, 26 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். இறுதிக்கட்டத்தில் ராயுடு மற்றும் மொயின் அலி சில பவுண்டரிகள் விளாச சிஎஸ்கே அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 226 ரன்கள் குவித்துள்ளது.