எப்படி ஐபிஎல் போட்டிகளுக்காக தண்ணீரை வீணாக்கலாம்?பிசிசிஐ, மத்திய அரசுக்கு நோட்டீஸ்…
தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நாட்டில் தண்ணீர் தட்டுப்பாடு இருக்கும் நிலையில், ஐபிஎல் போட்டிகளுக்காக லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீரை எப்படி வீணாக்கலாம் என்று கேள்வி எழுப்பியுள்ளது.
இதுதொடர்பாக ஐபிஎல் போட்டி நடக்கும் 9 மாநிலங்களுக்கும், இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ), மத்திய அரசும் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
ராஜஸ்தான் மாநிலம், ஆல்வார் நகரைச் சேர்ந்த ஹைதர் அலி என்ற இளைஞர் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தார். ஹைதர் அலி சார்பில் வழக்கறிஞர்கள் பிரஹம் சிங், ரோகித் வித்யூத் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனுவில் கூறியிருப்பதாவது:
நாட்டில் பல்வேறு மாநிலங்களில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. ஆனால், விளையாட்டு மைதானங்களை பராமரிக்க நாள்தோறும் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாக்கப்பட்டு வருகிறது.
பணத்துக்காகவும், வர்த்தக நோக்கத்துக்காகவும் வரும் ஏப்ரல் 7-ம் தேதி முதல் 9 மாநிலங்களில் நடத்தப்படும் 11-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தடை செய்ய வேண்டும்.
9 மாநிலங்களில் 51 நாட்கள் 60 போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்தப் போட்டிகளுக்காக மைதானங்களை பராமரிக்க லட்சக்கணக்காண லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்தும் போது, நிலத்தடி நீர் பெருமளவு பாதிக்கப்படும். ஆதலால், போட்டிகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதி ஜாவத் ரஹிம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவுக்கு 2 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு, மத்திய நீர்வளத்துறை அமைச்சகம், பிசிசிஐ, 9 மாநிலங்கள் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஏப்ரல் 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.