#IPL BREAKING: கடைசி ஓவர் த்ரில்..! மும்பை கோட்டையில் வெற்றிக்கொடி நாட்டிய பஞ்சாப்..!
ஐபிஎல் தொடரின் இன்றைய MI vs PBKS போட்டியில், பஞ்சாப் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி.
16-வது ஐபிஎல் தொடரில் இன்று இரு போட்டிகள் நடைபெறுகிற நிலையில், இரவு 7.30 மணிக்கு தொடங்கியப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன், பஞ்சாப் அணிக்கு எதிராக பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இதன்படி, பஞ்சாப் அணியில் முதலில் மேத்தியூ ஷார்ட் மற்றும் பிரப்சிம்ரன் சிங் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். அபாரமாக விளையாடிய சாம் கரன் 55 ரன்களும், ஹர்பிரீத் சிங் பாட்டியா 41 ரன்களும் குவித்தனர். முடிவில் 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 8 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் களமிறங்கிய மும்பை அணியில் கேப்டன் ரோஹித் சர்மா நல்ல தொடக்கம் அமைத்துக்கொடுக்க, இஷான் கிஷன் 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த ரோஹித் சர்மா 44 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து கேமரூன் கிரீன் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஜோடி அதிரடியாக விளையாடி பந்துகளை நாலாபுறமும் பவுண்டரிகளுக்கும் சிக்ஸர்களுக்கும் பறக்கவிட்டு ரன்களை குவித்தனர்.
இதையடுத்து, அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த கேமரூன் கிரீன் 67 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பிறகு களமிறங்கிய டிம் டேவிட் சில சிக்ஸர்களை பறக்கவிட, சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்த 57 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார். இறுதியில் மும்பை அணி வெற்றி பெற 6 பந்துகளில் 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 2 ரன்கள் மட்டுமே அடிக்க, பஞ்சாப் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முடிவில், மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் குவித்துள்ளது. மும்பை அணியில் அதிகபட்சமாக கேமரூன் கிரீன் 67 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 57 ரன்களும், ரோஹித் சர்மா 44 ரன்களும், டிம் டேவிட் 25* ரன்களும் குவித்துள்ளனர். பஞ்சாப் அணியில் அர்ஷ்தீப் சிங் அதிரடியாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.