#IPL BREAKING: ஐபிஎல் மகுடம்..! 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற சென்னை..!

CSK won IPL

ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில், சென்னை அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.

ஐபிஎல் 2023 தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், பிளேஆப் சுற்று போட்டிகள் முடிவடைந்து இறுதி போட்டி இன்று நடைபெற்றது. இந்த இறுதி போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதன்படி, முதலில் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 96 ரன்களும், விருத்திமான் சாஹா 54 ரன்களும், சுப்மன் கில் 39 ரன்களும் குவித்தனர். சென்னை அணியில் மதீஷ பத்திரன 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து, 215 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கில் களமிறங்கிய சென்னை அணி 3 பந்துகளில் 4 ரன்கள் எடுக்க மழை பெய்து ஆட்டம் தாமதமானது. பின், ஆட்டமானது தொடங்கிய நிலையில், சென்னை அணிக்கு 15 ஓவர்களில் 171 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

அதன்படி, முதலில் களமிறங்கிய கெய்க்வாட் மற்றும் கான்வே அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். சிறப்பாக பந்துவீசிய நூர் அகமது ஒரே ஓவரில் கெய்க்வாட் மற்றும் கன்வேயின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரையடுத்து களமிறங்கிய ரஹானே அதிரடியாக விளையாடிய நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

ராயுடு அதிரடி காட்ட சில சிக்ஸர்களை பறக்க விட்டு விக்கெட்டை இழந்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தோனி வந்த வேகத்திலேயே வெளியேறி ஏமாற்றத்தை அளித்தார். இறுதி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஜடேஜா அதிரடியால் ஒரு சிக்ஸர் மற்றும் பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெறவைத்தார்.

முடிவில், சென்னை அணி 15 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக கான்வே 47 ரன்களும், சிவம் துபே 32* ரன்களும், ரஹானே 27 ரன்களும், ருதுராஜ் கெய்க்வாட் 26 ரன்களும் குவித்தனர். குஜராத் அணியில் மோஹித் ஷர்மா 3 விக்கெட்டுகளையும், நூர் அகமது 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

16 வது ஐபிஎல் சீசனில் வென்றதால் சென்னை அணி ஐபிஎல் வரலாற்றில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதன் மூலம் அதிக முறை பட்டம் வென்ற மும்பை அணியின் சாதனையை சென்னை சமன் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்