#IPL BREAKING: பரபரப்பான ஆட்டம்..! ராஜஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி..!
ஐபிஎல் தொடரின் இன்றைய PBKS vs RR போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
16-வது ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தர்மசாலாவில் உள்ள இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக சாம் கர்ரன் 49* ரன்களும், ஜிதேஷ் சர்மா 44 ரன்களும், ஷாரு கான் 41* ரன்களும் குவித்தனர். ராஜஸ்தான் அணியில் நவ்தீப் சைனி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து, 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் ராஜஸ்தான் அணியில் ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர் முதலில் களமிறங்கினர். பட்லர் ரன்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க, ஜெய்ஸ்வால் பொறுப்பாக விளையாடி ரன்கள் குவித்தார். அதன்பின், களமிறங்கிய தேவ்தட் படிக்கல், ஜெய்ஸ்வாலுடன் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இருந்தும் படிக்கல் 30 பந்துகளில் அரைசதம் கடந்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த ஜெய்ஸ்வாலும் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். இதன்பின் ஹெட்மியர் பவுண்டரிகள், சிக்ஸர்கள் என பறக்கவிட்டு அரைசதம் அடிக்கும் நிலையில் 46 ரன்களுடன் வெளியேறினார்.
முடிவில், ராஜஸ்தான் அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக தேவ்தட் படிக்கல் 51 ரன்களும், ஜெய்ஸ்வால் 50 ரன்களும், ஷிம்ரோன் ஹெட்மியர் 46 ரன்களும், ரியான் பராக் 20 ரன்களும் குவித்தனர். பஞ்சாப் அணியில் ககிசோ ரபாடா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.