#IPL Breaking: ட்விட்ஸ்டில் முடிந்த கடைசி ஓவர்..சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி..!
ஐபிஎல் தொடரின் இன்றைய CSK vs RCB போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
16-வது ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள், பெங்களூரு சின்னசுவாமி ஸ்டேடியத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டுபிளெஸ்ஸி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணியில், தொடக்க வீரர் ருதுராஜ் 3 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் இறங்கிய ரஹானே (37), கான்வே உடன் இணைந்து அதிரடியாக ரன்கள் குவித்தார். மறுபுறம் கான்வே (83) தன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகள் என அரைசதம் கடந்தார். முடிவில் சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 226 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து, 227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக, விராட் கோலி மற்றும் டுபிளெஸ்ஸி களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய டுபிளெஸ்ஸி அரைசதம் அடித்த நிலையில் விராட் கோலி 6 ரன்கள் எடுத்து களத்தை விட்டு வெளியேறினார். இவரையடுத்து களமிறங்கிய மேக்ஸ்வெல், அரைசதம் விளாசி 76 ரன்களில் தீக்ஷனா பந்தில் தோனி கேட்ச் பிடிக்க ஆட்டமிழந்து வெளியேறினார்.
அடுத்ததாக களமிறங்கிய ஷாபாஸ் அகமது (12 ரன்கள்), தினேஷ் கார்த்திக் ஜோடி ஆட்டமிழக்க, சுயாஷ் பிரபுதேசாய் மற்றும் வனிந்து ஹசரங்க இறுதிவரை களத்தில் இருந்தனர். இறுதியில், 1 பந்திற்கு 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் வெற்றி இலக்கை எட்டமுடியாமல் தோல்வியை தழுவியது. பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 218 எடுத்துள்ளது.
இதனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரு அணியில் அதிகபட்சமாக கிளென் மேக்ஸ்வெல் 76 ரன்களும், டுபிளெஸ்ஸி 62 ரன்களும், தினேஷ் கார்த்திக் 28 ரன்களும் குவித்துள்ளனர். சென்னை அணியில் துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டுகளும், மதீஷ பத்திரன 2 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர்.