#IPL BREAKING: சென்னை அணி மிரட்டல் ஆட்டம்..! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
ஐபிஎல் தொடரின் இன்றைய CSK vs SRH போட்டியில், சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி.
16-வது சீசன் ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதன்படி, ஹைதராபாத் அணியில் முதலில் ஹாரி புரூக் மற்றும் அபிஷேக் சர்மா தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். முடிவில் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் மட்டுமே குவித்தது. ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 34 ரன்களும், ராகுல் திரிபாதி 21 ரன்களும் குவித்துள்ளனர்.
இதையடுத்து, 135 ரன்கள் என்ற வெற்றி இலக்கில் சென்னை அணியில் முதலில் களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வா மற்றும் டெவோன் கான்வே நல்ல தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர். ஒருபுறம் ருதுராஜ் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்க, மறுபுறம் கான்வே அதிரடியாக விளையாடி சிக்ஸர்கள், பவுண்டரிகள் என பறக்கவிட்டு அரைசதத்தை எட்டினார்.
இதையடுத்து, சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த ருதுராஜ் துரதிஷ்டவசமாக நான்ஸ்ட்ரைக்கர் திசையில் கான்வே அடித்த பந்து உம்ரான் மாலிக்கின் கைபட்டு ரன்அவுட் முறையில் தனது விக்கெட்டை இழந்தார். அதன் பிறகு ரகானே களமிறங்கி கான்வேயுடன் ஜோடி சேர்ந்து வழக்கம்போல் தனது ஆட்டத்தைத் தொடங்கினார். இருந்தும் ரகானே 9 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
அதன்பிறகு களமிறங்கிய ராயுடுவும் பெரிதாக சோபிக்காமல் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். முடிவில் சிஎஸ்கே அணி 18.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை எட்டியது. சென்னை அணியில் அதிகபட்சமாக டெவோன் கான்வே 77* ரன்களும், ருதுராஜ் கெய்க்வா 35 ரன்களும் குவித்துள்ளனர். ஹைதராபாத் அணியில் மயங்க் மார்கண்டே 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.