ஐபிஎல் 2025 : வெளியானது மெகா ஏலம் விதிகள்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

நடைபெறப்போகும் ஐபிஎல் மெகா ஏலத்தில் ஒரு அணி 6 வீரர்களைத் தக்க வைத்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

IPL Auction 2025

மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக ஐபிஎல் தொடருக்கான இந்த மெகா ஏலம் தான் பேசும் பொருளாகவே இருந்து வருகிறது.

அதிலும், ஐபிஎல் மெகா ஏலத்தை குறித்து பல தகவல்கள் வெளியாகி எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்தது. ஆனால், சற்று முன்பே வரவேண்டிய இந்த ஐபிஎல் மெகா ஏலத்தின் விதிகள் பல காரணங்களுக்காக பிசிசிஐ வெளியிடுவதற்கு தாமதமானது.

இந்த நிலையில், ஐபிஎல் அணி உரிமையாளர்கள், ரசிகர்கள் என பலரும் எதிர்பார்த்த இந்த ஐபிஎல் மெகா ஏலத்தின் விதிகள் தற்போது பிசிசஐ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி, 8 புதிய விதிகள் என்னன்ன என்பதனை பார்க்கலாம். இந்த விதிகள் சற்று எல்லா அணிகளுமே சாதகமாக இருப்பதால் ரசிகர்களும் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர்.

ஐபிஎல் புதிய விதிகள் :

  1. ஐபிஎல் அணிகள் அதிகபட்சமாக 6 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளமுடியும். அதாவது, ஏலம் நடைபெறுவதற்கு முன்பாக வீரர்களை நேரடியாகவோ அல்லது ஏலம் நடைபெறும் போதோ ரைட் டூ மேட்ச் (RTM) என்ற அட்டையை பயன்படுத்தி தக்க வைத்துக் கொள்ளலாம்.
  2. ஒரு அணி 6 வீரர்களில் எத்தனை வீரர்களை தக்க வைப்பது மற்றும் எத்தனை வீரர்களை RTM அட்டையை பயன்படுத்தி வாங்குவது என்பதை அந்த அணியே முடிவு செய்து கொள்ளலாம். மேலும், தக்க வைக்கப்படும் அல்லது RTM அட்டையை பயன்படுத்தி வாங்கப்படும் 6 வீரர்களில் அதிகபட்சமாக 5 சர்வதேச போட்டிகள் விளையாடிய வீரர்கள் இடம் பெறலாம். மேலும், அதிகபட்சமாக 2 உள்ளூர் வீரர்கள் இடம் பெறலாம். தக்க வைக்கப்படும் 5 சர்வதேச வீரர்களில் இந்திய வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்களுக்கு இத்தனை பேர் தான் இடம் பெற வேண்டும் என்ற எந்த கட்டுப்பாடும் இல்லை. ஒரு அணி விரும்பினால் 5 வெளிநாட்டு வீரர்களை கூட அணியில் தக்க வைத்து கொள்ளலாம்.
  3. ஐபிஎல் ஏலத்தில் செலவு செய்வதற்கான தொகை முன்பு 100 கோடி ரூபாயாக இருந்தது, தற்போது அந்த தொகை 120 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. ஏலத்தில் செலவிட வேண்டிய தொகையைத் தாண்டி வீரர்களின் சிறப்பான செயல்பாட்டுக்கான தொகை மற்றும் ஒவ்வொரு போட்டிக்கும் வீரர்களுக்கான சம்பளம் ஆகியவற்றை சேர்த்து மொத்தமாக 2025 ஐபிஎல் தொடரில் 146 கோடி வரை ஒரு அணி செலவு செய்யலாம். இந்த தொகை அடுத்தடுத்து நடைபெறும், அதாவது 2026 ஐபிஎல் தொடரில் 151 கோடி ரூபாயாகவும், 2027 ஐபிஎல் 157 கோடி ரூபாயாகவும் அதிகரிக்கும்.
  4. ஐபிஎல் தொடரில் முதன்முறையாக போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு போட்டிக்கான பிரத்யேக  சம்பளம் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஒரு அணியில் விளையாடும் ஒரு வீரருக்கு ஒவ்வொரு போட்டிக்கும் ரூ.7.50 லட்சம் சம்பளமாக அளிக்கப்படும். இந்த சம்பளம் இம்பாக்ட் வீரருக்கும் சேர்த்து பொருந்தும். தங்கள் அணியின் வீரர்களுக்கு ஒப்பந்தத்தின்படி அளிக்கும் சம்பளத்தோடு, அதனுடன் கூடுதலாக போட்டி சம்பளத்தை ஒவ்வொரு அணியும் வழங்க வேண்டும்.
  5. எந்த ஒரு வெளிநாட்டு வீரராக இருந்தாலும் சரி அவர்கள் மெகா ஏலத்தில் தங்களது பெயர்களை பதிவு செய்தால் மட்டுமே அடுத்து நடைபெறும் மினி ஏலத்திலும் பங்கேற்க முடியும். மெகா ஏலத்தில் தங்கள் பெயரை பதிவு செய்யாவிட்டால் அடுத்த நடக்கும் மினி ஏலத்தில் பங்கு பெற முடியாது. 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே இந்த மெகா ஏலம் நடைபெறுகிறது, இதனால் ஒரு வெளிநாட்டு வீரர் 2025 மெகா ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்யாமல் விட்டால், 2025, 2026 மற்றும் 2027 என தொடர்ந்து 3 ஐபிஎல் தொடரில் அவரால் பங்கேற்க முடியாது.
  6. ஒரு வீரர் ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்த பின்பு அதன் பின் நடக்கும் ஏலத்தில் ஒரு அணியால் வாங்கப்பட்ட பின்பு, ஐபிஎல் தொடர் துவங்கும் முன் தொடரில் இருந்து விலகினால் அந்த வீரர் அடுத்த 2 ஐபிஎல் சீசன்களுக்கு தடை செய்யப்படுவார்.
  7. சர்வதேச போட்டிகளில் விளையாடிய ஒரு இந்திய வீரர், ஐந்து ஆண்டுகளுக்கு எந்த ஒரு சர்வதேச போட்டிகளிலும் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம் பெறவில்லை என்றாலோ, பிசிசிஐயின் ஒப்பந்தத்தை பெற்றிருக்கவில்லை என்றாலோ அவர் உள்ளூர் வீரராக கருதப்படுவார், அதாவது கிட்டத்தட்ட Uncapped வீரராக கருதப்படுவார். இந்த விதி தோனியை உள்ளூர் வீரராக சிஎஸ்கே அணி தக்க வைக்க வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்ட விதியாக கூறப்படுகிறது. மேலும், ஐபிஎல் தொடரின் பார்வையாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வதில் தோனியின் பங்கு மிக அதிகம் என்பதால், அவருக்காகவே பிரத்தேயகமாக பிசிசிஐ இந்த சிறப்பு விதியை அமல்படுத்தி உள்ளதாக கூறுகிறார்கள்.
  8. 2025 முதல் 2027 வரை நடைபெறும் எல்லா ஐபிஎல் தொடர்களுக்கும் இந்த இம்பாக்ட் வீரர் விதி பொருந்தும். அதில் எந்த மாற்றமும் பிசிசிஐ செய்யப்படவில்லை. சில அணிகள் இந்த விதியை விரும்பாத போதும் பிசிசிஐ இந்த விதியை தொடர முடிவு செய்து இருக்கிறது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்