ஐபிஎல் 2025 : கே.எல்.ராகுலை விடுவித்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்? இதுதான் காரணம்?
ஐபிஎல் தொடரின் நட்சத்திர வீரரான கே.எல்.ராகுலின் விளையாட்டு சரி இல்லாததால் அவரை அணியில் இருந்து விடுவிக்க உள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.
லக்னோ : நடைபெற போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்திற்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே இருப்பதால் அதற்கான ஏற்பாடுகளை ஒவ்வொரு அணியம் தீவிரமாகச் செய்து வருகிறது. மேலும், வரும் அக்டோபர்-31ம் தேதிக்குள் எல்லா ஐபிஎல் அணிகளும், தங்களது அணியில் தக்க வைக்க உள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என பிசிசிஐ தெரிவித்திருந்தது.
இதனால், அந்த அக்டோபர்-31ம் தேதிக்காகவே ரசிகர்கள் எதிர்பார்ப்பிலிருந்து வருகின்றனர். இப்படி இருக்கையில், மறுபக்கம் எந்த அணியில் எந்த வீரர்களைத் தக்க வைக்க உள்ளார்கள் என்பதைக் குறித்த ஒரு சில தகவல்கள் வெளிவந்து கொண்டே இருக்கிறது.
அந்த வகையில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனான கே.எல்.ராகுலை அந்த அணி விடுவிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. முன்னதாக இந்த ஆண்டு (2024) நடைபெற்ற ஐபிஎல் தொடரில், லக்னோ அணியின் உரிமையாளருக்கும், கே.எல்.ராகுலுக்கும் முட்டலும் மோதலும் இருந்து வந்த விஷயங்கள் நமக்குத் தெரியும்.
இதைத் தொடர்ந்து தற்போது, இது போன்ற தகவலும் ஐபிஎல் நெருங்கிய வட்டாரத்தின் மூலம் தெரியவந்துள்ளது. இதற்குக் காரணமாகக் கூறப்படுவது என்னவென்றால், “கடந்த 3 சீசன்களாகவே கே.எல்.ராகுலின் விளையாட்டு சரி இல்லை.
அவர் அதிகம் அடிக்க வேண்டிய போட்டிகளில், பந்தை வீணடித்து அணிக்கு அழுத்தம் ஏற்படுத்துகிறார்.அவரது ஆட்டத்தால் விறுவிறுப்பாகச் செல்லும் போட்டியின் மொமெண்ட்டமும் மாறுகிறது”, என இது போன்ற காரணங்களுக்காக கே.எல்.ராகுலை லக்னோ அணி விடுவிக்கவுள்ளதாக ஐபிஎல் நெருங்கிய வட்டாரத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும், வரும் அக்.-31ம் தேதி இது குறித்த உண்மைத் தகவல் தெரிந்து விடும் என்பதால் ரசிகர்களுக்கு இந்த செய்தி அதிர்ச்சியளித்தாலும், எதிர்பார்ப்பின் உச்சத்திலே இருந்து வருகின்றனர்.