ஐபிஎல் 2025 : “கொஞ்சம் புத்திசாலித்தனமா நடந்துக்கோங்க”! ஆர்சிபி ரசிகரை விளாசிய ரிஷப் பண்ட்!
தயவு செய்து எப்போதும் ஒரு தகவல் வந்தால் ஆதாரங்களை சரி பார்த்து அதனை பகிருங்கள் என டெல்லி அணியின் கேப்டனான ரிஷப் பண்ட் கூறியிருக்கிறார்.
சென்னை : நடைபெறப்போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தை நடத்துவதற்கு பிசிசிஐ தற்போது தயாராகி வருகிறது. இந்த நிலையில் ஒரு அணி 5 வீரர்களை மட்டுமே தக்க வைக்க முடியும் எனவும் RTM மூலமாக எந்த ஒரு வீரரையும் தக்க வைக்க முடியாது எனவும் நேற்று ஒரு தகவல் பரவலாக பரவி வந்தது.
இது ஒரு பக்கம் இருக்கையில் மறுபக்கம் ஐபிஎல்லில் விளையாடி வரும் பல நட்சத்திர வீரர்கள் டிரேடிங் முறையில் வேறு அணிகளுக்கு செல்ல உள்ளதாக அவ்வப்போது சில தகவல்கள் வெளியாகி வந்தது. அதன்படி டெல்லி கேப்பிடல் அணியின் கேப்டனாக செயலாற்றி வரும் ரிஷப் பண்ட் அந்த அணியிலிருந்து வெளியேறி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாட உள்ளார் என ஒரு பேச்சுக்கள் அடிபட்டது.
மேலும், ரசிகர்கள் இடையே பேச்சுவார்த்தையாக இருந்த இந்த தகவல் நேற்று பெங்களூரு ரசிகர் ஒருவரால் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்தது. அந்த ரசிகர் அவரது எக்ஸ் வலைத்தள பக்கத்தில், ‘பெங்களூரு அணியுடன் ரிஷப் பண்ட் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார் எனவும், டெல்லி அணியில் விளையாடுவதற்கு விரும்பாமல் பெங்களூரு அணியில் விளையாடுவதற்கு அந்த அணியின் உரிமையாளரை தொடர்பு கொண்டதாகவும், இதற்கு விராட் கோலி மறுப்பு தெரிவித்ததாகவும்’ என இப்படி ஒரு பொய்யான தகவலை பரப்பி இருந்தார்.
இந்தப் பதிவிற்கு கடுப்பான ரிஷப் பண்ட் அவருக்கும், இதர ரசிகர்களுக்கும் பதிலளித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில்,“இது முற்றிலும் பொய்யான செய்தி. சமூக வலைதளங்களில் ஏன் இது போன்ற போலியான செய்திகளை பரப்புகிறீர்கள்?. கொஞ்சம் புத்திசாலித்தனமாக இருங்கள். எக்காரணம் கொண்டு நம்பத்தகாத தகவலை பரப்பாதீர்கள். இது முதல் முறையுமல்ல, கடைசியாகவும் இருக்கப்போவதில்லை.
ஆனால் நான் இதை சொல்லியே ஆக வேண்டும். தயவு செய்து எப்போதும் ஒரு தகவல் வந்தால் ஆதாரங்களை சரி பார்க்கவும். ஒவ்வொரு நாளும் அது மோசமாகி வருகிறது. மற்ற அனைத்தும் உங்களைப் பொறுத்தது. இது உங்களுக்கு மட்டுமல்ல. தவறான தகவல் பரப்பும் அனைத்து நபர்களுக்குமான பதில்”, என ரிஷப் பண்ட் பதிலளித்து பதிவிட்டிருந்தார்.
Fake news . Why do you guys spread so much fake news on social media. Be sensible guys so bad . Don’t create untrustworthy environment for no reason. It’s not the first time and won’t be last but I had to put this out .please always re check with your so called sources. Everyday…
— Rishabh Pant (@RishabhPant17) September 26, 2024