ஐபிஎல் 2022: எங்கு நடக்கிறது? எப்போது நடக்கிறது? – பிசிசிஐ வெளியிட்ட தகவல்!
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2022 போட்டிகள் இந்தியாவில் பார்வையாளர்களின்றி நடத்தப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தகவல்.
நடப்பாண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2022 கிரிக்கெட் தொடரை இந்தியாவிலேயே நடத்த பிசிசிஐ முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் தொடரை மும்பை மற்றும் புனேவில் பார்வையாளர்களின்றி நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) திட்டமிட்டு வருவதாகவும் தகவல் கூறப்படுகிறது. ஐபிஎல் 2020 தொடர் முற்றிலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்றது. அதே நேரத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரம் காரணமாக இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் 2021 போட்டிகளின் இரண்டாம் பாதியும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து, ஐபிஎல் 2022-ஆம் ஆண்டிற்கான தொடரில் மெகா ஏலம் என்பதால் 8 அணிகளும் தக்கவைக்கப்படும் தங்களது வீரர்களின் பட்டியலை அறிவித்தனர். அதுமட்டுமில்லாமல் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் அகமதாபாத் மற்றும் லக்னோ என இரண்டு புதிய அணிகள் சேர்ந்து, மொத்தம் 10 அணிகள் ஐபிஎல் தொடரில் பங்கேற்கின்றன. இதனால் விரைவில் நடைபெற உள்ள இரண்டு நாள் நடைபெற உள்ள மெகா ஏலத்தில் 10 அணிகள் திறமையான வீரர்களை ஏலம் எடுக்கவுள்ளன.
இந்தியன் பிரீமியர் லீக்கின் இரண்டு புதிய அணிகள் – அகமதாபாத் மற்றும் லக்னோ 2022 சீசனுக்கான வரவிருக்கும் மெகா ஏலத்திற்கு முன்னதாக தக்கவைக்கப்படும் வீரர்களை அறிவித்தனர். ஹர்திக் பாண்டியா (ரூ.15 கோடி), ரஷித் கான் (ரூ.15 கோடி), ஷுப்மான் கில் (ரூ.8 கோடி) ஆகியோரை அகமதாபாத் தேர்வு செய்துள்ளது. லக்னோ அணியில் கேஎல் ராகுல் (ரூ.17 கோடி), மார்கஸ் ஸ்டோனிஸ் (ரூ.9.2 கோடி), மற்றும் ரவி பிஷ்னோய் (ரூ.4 கோடி) ஆகியோரை தேர்வு செய்துள்ளனர்.
இதனிடையே, இந்தியாவில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதால், நடப்பாண்டு ஐபிஎல் தொடர் எங்கு நடக்கும் எப்போது நடக்கும் என்று பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது. இந்த நிலையில், ஐபிஎல் தொடரை இந்தியாவில் நடத்த முடியாவிட்டால் எங்கு நடத்துவது என்பது குறித்து ஐபிஎல் அணி உரிமையாளர்களுடன் இன்று பிசிசிஐ ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனையில், நடப்பாண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2022 கிரிக்கெட் தொடரை பார்வையாளர்களின்றி இந்தியாவிலேயே நடத்த பிசிசிஐ முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2022-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரை வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி தொடங்க பிசிசிஐ திட்டமிட்டு இருந்த நிலையில், ஐபிஎல் தொடரை மார்ச் 27 ஆ தேதி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ள பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தாக கூறப்படுகிறது. எனவே, ஐபிஎல் 2022 தொடர் எங்கு நடக்கும், எப்போது நடக்கும் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஐபிஎல் 2022-ஆம் ஆண்டுக்கான மெகா ஏலம் பிப்ரவரி 12 மற்றும் 13 தேதிகளில் பெங்களூருவில் நடைபெற உள்ளது.