INDvsPAK: சரவெடியாய் வெடித்த விராட் கோலி வரலாற்று சாதனை! சச்சின் சாதனை முறியடிப்பு.!
பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் விராட் கோலி 15 ரன்கள் எடுத்திருந்த போது, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 14,000 ரன்களை கடந்தார்.

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. துபாயில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி, 49.4 ஓவர்களில் 241 ரன்களை சேர்த்தது.
இதையடுத்து 242 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய இந்திய அணி, 42.3 ஓவர்களில் 4 விக்கெட் மட்டுமே இழந்து 244 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தியா கிட்டத்தட்ட அரையிறுதிக்கு வந்து விட்டது. இப்போது அது மார்ச் 2 ஆம் தேதி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது இந்தியா.
நேற்றைய போட்டியில், குறிப்பாக நட்சத்திர வீரர் விராட் கோலி சதம் விளாசினார். கடைசிவரை களத்தில் நின்ற கோலி, 111 பந்துகளில் 100 ரன்கள் விளாசினார். இது அவரது ஒருநாள் கிரிக்கெட்டில் கோலியின் 51ஆவது சதம் ஆகும். இந்த மைல்கல்லை எட்டிய வேகமான பேட்ஸ்மேன் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார்.
ஒருநாள் போட்டியில் 14000 ரன்களை கடக்க கோலிக்கு 15 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அதனை 13வது ஓவரில் ஹாரிஸ் ரவூஃப் பந்தில் பவுண்டரி அடித்ததன் மூலம் கோலி இந்த சாதனையை நிகழ்த்தினார். வங்கதேசத்திற்கு எதிரான போட்டியிலும் கோலிக்கு இந்த சாதனையை செய்ய வாய்ப்பு கிடைத்தது, ஆனால் அவர் 22 ரன்கள் எடுத்த பிறகு ஆட்டமிழந்தார்.
சச்சின் சாதனை முறியடிப்பு
பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் விராட் கோலி 15 ரன்கள் எடுத்திருந்த போது, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 14,000 ரன்களை கடந்தார். இதன் மூலம், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இந்த சாதனையை விராட் கோலி 3-ஆவது வீரராக படைத்துள்ளார். இதற்கு முன்னர் சச்சின் 350-ஆவது இன்னிங்சில் 14,000 ரன்களையும், சங்கக்கரா 378-ஆவது இன்னிங்சில் 14,000 ரன்களையும் கடந்திருந்தனர். தற்போது விராட் கோலி வெறும் 287 இன்னிங்சில் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார்.
கேட்ச் செய்தும் சாதனை
அது மட்டும் இல்லாமல், ஒருநாள் போட்டிகளில் அதிக கேட்ச் பிடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் விராட் கோலி (158 கேட்ச்) முதலிடம் பிடித்துள்ளார். இந்தியாவுக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக கேட்சுகளைப் பிடித்த பீல்டர் என்ற பெருமையை கோலி பெற்றார். பாகிஸ்தானுக்கு திரான ஆட்டத்தில் 2 கேட்ச் பிடித்ததன் மூலம் இந்த சாதனையை அவர் படைத்துள்ளார். இந்த பட்டியலில் அசாருதீன் 156 கேட்ச் பிடித்து இரண்டாவது இடத்தில் உள்ளார். சச்சின் 140, டிராவிட் 124, ரெய்னா 102 கேட்சுகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.