INDvsNZ : 25 ஆண்டுகால பழைய கணக்கை பழி தீர்க்குமா இந்தியா?

25 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா மற்றும்  நியூசிலாந்து அணிகள் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் மைதானத்தில் மோதவுள்ளது.

IND VS NZ CT 2025

துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் இந்தியா மற்றும்  நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளது. இந்த இரண்டு அணிகளும் இதற்கு முன்னதாக இதைப்போலவே கடந்த 2000-ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் மோதியிருந்தது.

அந்த போட்டியை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிடமுடியாது என்று தான் சொல்லவேண்டும்.  ஏனென்றால், அந்த வரலாற்றுச் சம்பவம் இன்று வரை இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றத்திற்குரிய ஒன்றாக இருந்து வருகிறது. அதற்கான காரணம் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது தான். இந்திய அணி அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்து விளையாடியது.

அப்போதைய அணியின் கேப்டனாக இருந்த சௌரவ் கங்குலி, தனது சிறந்த ஆட்டத்தைக் காட்டி, 117 ரன்கள் (130 பந்துகளில், 9 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்) விளாசினார். அவருக்கு துணையாக சச்சின் 69  ரன்கள் அடித்தார்.  இவர்களுடைய அதிரடி ஆட்டம் காரணமாக இந்தியாவுக்கு நல்ல தொடக்கமும் கிடைத்தது. இருப்பினும் இவர்களுக்கு பிறகு வந்த வீரர்கள் தொடர்ச்சியாக தங்களுடைய விக்கெட்களை இழந்த காரணத்தால் இந்திய அணி தடுமாறி 50 ஓவர்கள் முடிவில் 264 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அடுத்ததாக களமிறங்கிய நியூசிலாந்து அணி ஆரம்பத்தில் இருந்தே விக்கெட்களை இழந்தது. ஒரு கட்டத்தில் 109 ரன்களுக்கு 4 விக்கெட்கள் இழந்து அணி தவித்துக்கொண்டு இருந்தது. இதன் காரணமாக அப்போது போட்டியை பார்த்து கொண்டிருந்த ரசிகர்களும், விளையாடிய வீரர்களுக்கும் இந்தியா வெற்றிபெறும் என்ற நம்பிக்கை வந்தது.

விக்கெட் எடுத்த காரணத்தால் இந்தியா உற்சாககமாக விளையாடிக்கொண்டிருந்த சமயத்தில் இந்திய அணிக்கு பயத்தை காட்டும் விதமாக கிறிஸ் கேயின்ஸ் களமிறங்கி அதிரடியாக பேட்டிங் செய்து சதம் விளாசினார். 102 ரன்கள் (113 பந்துகளில், 8 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். இவருடைய அதிரடி ஆட்டம் காரணமாக நியூசிலாந்து அணி 49.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 265 என்ற ரன்களை எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து தனது முதல் ஐசிசி கோப்பையை வென்றது.

பழி தீருமா? மீண்டும் அதே கதை தொடருமா?

எனவே, அந்த போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது என்பது இன்று வரை மறக்க முடியாத ஒரு விஷயமாக இருந்து வருகிறது. இந்த சூழலில் அதே இரண்டு அணிகள் இந்த ஆண்டு (2025) சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் மீண்டும் மோத உள்ளன. இது இந்திய அணிக்காக ஒரு பழிவாங்கும் வாய்ப்பா? அல்லது நியூசிலாந்து தனது பழைய வெற்றியை மீண்டும் ரீ கிரியேட் செய்யுமா? என்கிற எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளது.

25 ஆண்டுகளுக்கு பிறகு இந்த இரண்டு அணிகளும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் மோதுகிறது என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளது. இந்த போட்டியில் இரண்டு அணிகளில் எந்த அணி வெற்றிபெறப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்