INDvsNZ T20: கான்வே, கிளென் பிலிப்ஸ் அரைசதத்துடன் நியூசிலாந்து அணி 160 ரன்கள் குவிப்பு.!
இந்தியா-நியூசிலாந்து மோதும் 3ஆவது டி-20யில் நியூசிலாந்து அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 160 ரன்கள் குவித்துள்ளது.
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையேயான 3 ஆவது டி-20 போட்டியில் டாஸ் வென்று நியூசிலாந்து அணி கேப்டன் டிம் சவுதி முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரரான ஃபின் ஆலன், ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் அர்ஷ்தீப் சிங் வீசிய பந்தில் 3 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.
அதன் பின் இறங்கிய மார்க் சாப்மேன்-கான்வே ஜோடி இணைந்து ஓரளவு ரன்கள் குவித்தனர். அணி 44 ரன்களில் இருந்தபோது, சாப்மேன் 12 ரன்னில் சிராஜ் வீசிய பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். அதன் பின் கான்வே-கிளென் பிலிப்ஸ் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடி இருவரும் அரைசதம் அடித்தனர்.
இதனால் நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் ஓரளவு பெரிய ஸ்கோரை அடிக்க முடிந்தது. இறுதியில் நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 160 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கான்வே 59 ரன்களும், கிளென் பிலிப்ஸ் 54 ரன்களும் எடுத்தனர். இந்தியா சார்பில் சிறப்பாக பந்து வீசிய சிராஜ் 17 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களும், மற்றும் அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்களும் வீழ்த்தினர்.