INDvsNZ ODI: தொடரை இழந்த இந்தியா! நியூசிலாந்துக்கு எதிரான 3வது போட்டி பாதியில் கைவிடப்பட்டது.!
இந்தியா-நியூசிலாந்து இடையே 3ஆவது ஒருநாள் போட்டி மழையினால் கைவிடப்பட்ட நிலையில், இந்தியா தொடரை இழந்தது.
இந்தியா- நியூசிலாந்துக்கு இடையேயான 3ஆவது ஒருநாள் போட்டி இன்று கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்றது. டாஸ் வென்று நியூசிலாந்து முதலில் பந்து வீசியது. இதன் படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில், ஷிகர் தவான்(28),கில்(13), என ஓப்பனிங் வீரர்கள் சொதப்ப, அதன் பின் களமிறங்கிய ஷ்ரேயஸ் ஐயர் ஓரளவு ரன்கள்(49) குவித்தார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார்(6) ரன்களுக்கும், ரிஷப் பந்த்(10), தீபக் ஹூடா(12) என நியூசிலாந்தின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வந்த வேகத்தில் திரும்பினர். வாஷிங்டன் சுந்தர் மட்டும் தனியாக நிலைத்து நின்று அரைசதம் அடித்து இந்தியா, 200 ரன்களைக் கடக்க போராடினார்.
இந்திய அணி, 47.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 219 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து தரப்பில் ஆடம் மில்னே, டேரில் மிட்சேல் தலா 3 விக்கெட்களும், டிம் சவுதி 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.
220 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, ஓப்பனிங் வீரர்கள் இருவரும் சிறப்பாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 104 ரன்கள் குவித்தனர். பின் ஆலன் 57 ரன்கள் குவித்த நிலையில் உம்ரன் மாலிக்கிடம் ஆட்டமிழந்தார். அதன் பிறகு ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது.
இதனால் ஆட்டம் முடிவு ஏதுமில்லாமல் கைவிடப்பட்டது. நியூசிலாந்து அணி, தொடரை 1-0 என்ற கணக்கில் வென்றது. டாம் லேதம் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.