#INDvSL: முதல் டெஸ்ட் போட்டி – 500 ரன்களை எட்டும் இந்திய அணி..சதம் அடித்த சர் ஜடேஜா!
இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் பிந்த்ரா ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, தனது முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணி முதல்நாள் ஆட்ட முடிவில் 85 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 357 ரன் எடுத்திருந்தது. ரவீந்திர ஜடேஜா 45*, அஸ்வின் 10* ரன் எடுத்து களத்தில் இருந்தனர்.
முதல் நாள் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 9 பவுண்டரி , 4 சிக்ஸர் என 96 ரன் எடுத்து விக்கெட்டை இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இந்த நிலையில், இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஜடேஜா, அஸ்வின் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 400 ரன்களை கடந்தது. 87 பந்துகளில் அரை சதமெடுத்த ஜடேஜா தொடர்ந்து பொறுப்புடன் விளையாடி இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
மறுபக்கம் சிறப்பான விளையாடி வந்த அஸ்வின், 67 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் அரை சதமெடுத்தார். இதன் பின் 61 ரன்களில் லக்மல் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார் அஸ்வின். இதனைத்தொடர்ந்து, சமீபகாலமாக பேட்டிங்கிலும் அசத்தி வரும் ஜடேஜா, இந்த டெஸ்டில் முதல் பேட்டராக சதமடித்தார். 160 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் சதமடித்து இந்திய அணியை வலுவான நிலைக்குக் கொண்டு சென்றுள்ளார். அஸ்வினை தொடர்ந்து ஜெயந்த் யாதவ்வும் தனது விக்கெட்டை இழந்தார்.
தற்போது இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸின் இரண்டாவது நாளில் விளையாடி வரும் இந்திய அணி, 117 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 480 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. ஜடேஜா 115 ரன்களுடன் மற்றும் முகமது ஷமி களத்தில் உள்ளார்கள். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் எப்படியும் 500 ரன்களைப் பெற்றுவிடும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, மொகாலி டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டத்தின்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே மறைவுக்கு இந்திய, இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் கருப்பு பேஜ் அணிந்து அஞ்சலி செலுத்தினர்.