INDvsBAN TestSeries: புஜாரா, ஸ்ரேயஸ் ஐயர் அரைசதம்! வலுவான நிலையில் இந்தியா.!
இந்தியா-வங்கதேசம் மோதும் முதல் டெஸ்டின் முதல் நாளில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் குவிப்பு.
இந்தியா-வங்கதேசம் இடையே இன்று தொடங்கிய டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மா காயம் காரணமாக இந்த போட்டியில் விளையாடாததால், ராகுல் மற்றும் சுப்மன் கில் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
நல்ல தொடக்கம் அமைத்து கொடுத்த இந்த ஜோடி 41 ரன்களில் தனது முதல் விக்கெட்டாக சுப்மன் கில் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சிறிது நேரத்தில் ராகுலும் 22 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பிறகு இறங்கிய விராட் கோலி 1 ரன்னில் வந்த வேகத்தில் கிளம்பினார்.
இந்திய அணி 48 ரன்களுக்குள் 3 விக்கெட்களை இழந்து தடுமாற, புஜாரா மற்றும் ரிஷப் பந்த் பொறுப்புடன் ஆடி ரன்கள் குவித்தனர். இந்த ஜோடி 112 ரன்களை எட்டியபோது ரிஷப் பந்த், 46 ரன்களில் மெஹதி ஹசன் வீசிய பந்தில் போல்டானார். புஜாரா-ரிஷப் பந்த் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 54 ரன்கள் குவித்தனர்.
அதன்பிறகு களமிறங்கிய ஸ்ரேயஸ் ஐயர், புஜாராவுடன் சேர்ந்து நிதானமாக ஆடினர். இருவரும் அரைசதம் கடந்து தேவையான பந்துகளில் மட்டும் ரன்கள் அடித்து ரன் எண்ணிக்கையை உயர்த்தி வந்தனர். இருவரும் சேர்ந்து 5-வது விக்கெட்டுக்கு 149 ரன்கள் குவித்தனர். இதனால் இந்திய அணி வலுவான ஸ்கோரை எட்ட முடிந்தது.
புஜாரா 90 ரன்களில் டைஜூல் இஸ்லாம் பௌலிங்கில் ஆட்டமிழந்தார். இதனால் சதமடிக்கும் வாய்ப்பை 10 ரன்களில் இழந்தார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் குவித்துள்ளது. ஆட்டநேர முடிவில் 90-வது ஓவரின் கடைசி பந்தில் அக்சர் பட்டேல் 14 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஸ்ரேயஸ் ஐயர் 82* ரன்களுடன் விளையாடி வருகிறார். வங்கதேச அணியின் தரப்பில் டைஜூல் இஸ்லாம் 3 விக்கெட்களும், மெஹதி ஹசன் 2 விக்கெட்களும் கலீத் அஹ்மது 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.