INDvsBAN TestSeries: 3 விக்கெட்களை இழந்தது வங்கதேச அணி.! வெற்றி பெற 337 ரன்கள் தேவை.!
இந்தியா-வங்கதேசம் மோதும் முதல் டெஸ்டின் 4-வது நாள் தேனீர் இடைவேளையில் வங்கதேசஅணி 176/3 ரன்கள் குவிப்பு.
இந்தியா-வங்கதேசம் மோதும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி, முதல் இன்னிங்சில் 410 ரன்களுக்கும், வங்கதேச அணி 150 ரன்களுக்கும் ஆல் அவுட் ஆனது.
254 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இந்திய அணி, 2 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்து 512 ரன்கள் முன்னிலையுடன் டிக்ளர் செய்தது. இதனை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய வங்கதேச அணி, நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய நஜ்முல் ஹூசைன் மற்றும் சாகிர் ஹசன் இருவரும் அரைசதம் கடந்து முதல் விக்கெட்டுக்கு 124 ரன்கள் குவித்தது. 67 ரன்கள் குவித்த நிலையில் நஜ்முல் ஹூசைன், உமேஷ் யாதவின் பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு களமிறங்கிய யாசிர் அலி 5 ரன்னுக்கு அக்சர் பட்டேல் பந்தில் போல்டானார்.
அடுத்து களமிறங்கிய லிட்டன் தாஸ் 19 ரன்களில் குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழக்க, தேனீர் இடைவேளையின் போது அந்த அணி 3 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் குவித்துள்ளது. சாகிர் ஹசன் 82 ரன்களும், முஸ்ஃபிக்கர் ரஹீம் 2 ரன்களும் எடுத்து விளையாடி வருகின்றனர். இன்னும் வெற்றி பெற வங்கதேச அணிக்கு, 337 ரன்கள் தேவைப்படுகிறது.