INDvsBAN : தொடங்கியது 4-ஆம் நாள் ஆட்டம்! வங்கதேச அணி ஆதிக்கம்?
இந்தியா, வங்கதேச இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியின் 4-வது நாள் ஆட்டம் எந்த ஒரு தடையுமின்றி நடைபெற்று வருகிறது.
கான்பூர் : வங்கதேச அணி இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடர் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 2-வது டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்று வரும் நிலையில், இந்த போட்டியின் 2-வது மற்றும் 3-வது நாள் ஆட்டம் மழையால் நடைபெறாமலே போனது.
தற்போது, 4-வது நாளான இன்று மழை, வெளிச்சமின்மை என எந்த ஒரு தடையுமின்றி போட்டி தொடங்கியுள்ளது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பே மழைப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. அதன்படி, இந்த போட்டி தொடங்கிய முதல் நாளே ஈரப்பதம் காரணமாக தாமதமாகவே தொடங்கியது.
முதல் நாள் முடிவில் போட்டியானது எந்த ஒரு அணியின் பக்கமும் சாயாமல் நடுநிலையாகவே முடிந்திருந்தது. அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த 2 நாட்களும் மழைப்பொழிவு தீவிரமடைந்ததால் போட்டியானது நடைபெறவில்லை. முதல் நாள் முடிவில் வங்கதேச அணி 3 விக்கெட்டுகள் இழந்து 107 ரன்கள் எடுத்திருந்தது. தற்போது, அதிலிருந்து விளையாடி வரும் வங்கதேச அணி மேலும் 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
முதல் நாளில் மொமினுல் ஹக் 40 ரன்கள் எடுத்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இன்று தொடங்கிய போட்டியிலும் அவர் சிறப்பாகவே விளையாடி வருகிறார். இதனால், அரை சதம் கடந்து தற்போது 73 ரன்கள் எடுத்துள்ளார். வங்கதேச அணி 6 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களுடன் விளையாடி வருகிறது.
இதனால், முதல் இன்னிங்ஸில் தற்போது ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளனர். மறுமுனையில் இந்தியாவும் விக்கெட்டுகளை எடுக்க தொடங்கியுள்ளனர். இப்படி விறுவிறுப்பாகவே டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.
ஆனால், பிரச்சினை என்னவென்றால் இன்னும் ஒன்றரை நாட்களை இருக்கும் நிலையில் முதல் இன்னிங்ஸ் இன்னும் முடிவடையத்தால் இந்த போட்டியானது ட்ரா ஆவதற்கே அதிக வாய்ப்புகள் இருக்கிறது. தற்போது, களத்தில் மெஹதியும், மொமினுல் ஹக்கும் விளையாடி வருகின்றனர்.