INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!
இந்தியா வங்கதேச அணிகளுக்கு இடையே இன்று நடந்த 2-ஆம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 303 ரன்கள் முன்னிலை பெற்று வருகிறது.
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம் விளாசி இருந்த அஸ்வின் இன்று தொடங்கிய 2-ஆம் நாள் ஆட்டத்தில் சிறுது நேரம் விளையாடிய அஸ்வின் 113 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அதே நேரம் இன்றைய நாள் தொடக்கத்தில் அவருடன் நேற்று கூட்டணி அமைத்து விளையாடி வந்த ஜடேஜாவும் 86 ரன்களில் தஸ்கின் அகமது பந்தில் ஆட்டமிழந்தார். இருவரின் விக்கெட் இழப்பிற்கு பிறகு இந்திய அணி விரைவாக தொடர்ந்து அத்தனை விக்கெட்டுகளை இழந்தது.
இதனால், முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 10 விக்கெட்டுகளையும் இழந்து 376 ரன்கள் எடுத்திருந்தது. அதனைத் தொடர்ந்து வங்கதேச அணி முதல் இன்னிங்ஸ்ஸிற்கு பேட்டிங் செய்ய களமிறங்கியது. வங்கதேச அணி பேட்ஸ்மேன்களில் எந்த ஒரு வீரரும் நிலைத்து விளையாடாமல் போனதால் மிக மிக நிதானமாகவே ரன்களை சேர்த்தனர்.
ஆனாலும், இந்திய அணியின் வேகபந்து வீச்சளரான பும்ராவின் அசாத்திய பந்து வீச்சால் வங்கதேச அணி வீரர்களால் ஈடு கொடுத்து விளையாட முடியவில்லை. இதனால், ஒவ்வொரு விக்கெட்டை காப்பற்றுவதே வங்கதேச வீரர்களுக்கு சவாலாக அமைந்தது.
இதனால், பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்கள். அதன்படி, 47.1 ஓவர்கள் மட்டுமே பேட்டிங் செய்த வங்கதேச அணி 10 விக்கெட்டையும் இழந்து 149 ரன்கள் மட்டுமே எடுத்து 227 ரன்கள் பின்தங்கி இருந்தது. இந்திய அணியின் பும்ரா 4 விக்கெட்டும், சிராஜ், ஆகாஷ் தீப் மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்டுகழும் கைப்பற்றி அசத்தினார்கள்.
அதனை தொடர்ந்து இந்தியா அணி தனது 2-வது இன்னிங்ஸிற்கு பேட்டிங் செய்ய களமிறங்கியது. முதல் இன்னிங்ஸை போலவே அடுத்தடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளான ரோஹித், கோலி மற்றும் ஜெய்ஸ்வால் ஆகிய பெரிய விக்கெட்டுகளை இழந்தது. ஜெய்ஸ்வால், முதல் இன்னிங்ஸில் நன்றாக விளையாடி அரை சதம் கடந்த நிலையில் 2-வது இன்னிங்ஸில் வெறும் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.
தற்போது, சுப்மன் கில் 33* ரன்களும் மற்றும் ரிஷப் பண்ட் 12* ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். அதே போல இந்திய அணியும் 23 ஓவர்களில் 81 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகள் இழந்து விளையாடி வருகிறது. இந்த போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம் நாளை காலை 9.30 மணிக்கு தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.