INDvsBAN : எதிர்பார்க்கும் பிளேயிங் லெவன்! போட்டியை எங்கு காணலாம்!
இந்திய மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற உள்ள டெஸ்ட் தொடர் நாளை மறுநாள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது.
சென்னை : கடந்த 2019-ம் ஆண்டுக்குப் பிறகு கிட்டத்தட்ட 5 வருடங்களுக்குப் பிறகு வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது. இதில், 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் அடங்கிய தொடர்களில் விளையாடவுள்ளனர். கடந்த 1 மாதமாக இந்த தொடருக்கான எதிர்பார்ப்பு என்பது ரசிகர்களிடையே இருந்து வருகிறது.
இந்த தொடரில் விளையாடவுள்ள டெஸ்ட் தொடரின் முதல் போட்டிக்கான இரு அணிகளையும் சமீபத்தில் அறிவித்தனர். மேலும், வங்கதேச அணி சமீபத்தில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அந்த தொடரை 2-0 எனக் கைப்பற்றி கிரிக்கெட்டில் புது வரலாற்றைப் படைத்தது.
இதனால், இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு வங்கதேச அணி சவாலாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், நாளை மறுநாள் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் காலை 9 மணிக்கு இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியானது தொடங்கவுள்ளது.
இந்த முதல் போட்டிக்கான இந்தியா மற்றும் வங்கதேச அணி இப்படி இருந்தால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என ரசிகர்கள் இணையத்தில் கூறி வருகின்றனர். அந்த அணியில் ஜெய்ஸ்வால், கில் மற்றும் அனுபவ இளம் வீரரான பண்ட் ஆகியோர் இடம்பெறச் செய்தால் நல்ல அணியாக இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
மேலும், விளையாடப் போவது சேப்பாக்கம் என்பதாலும் சூழலுக்கு கைகொடுக்கும் பிச் என்பதாலும் 3 ஸ்பின்னர்களை இடம்பெற வைக்கலாம் எனக் கூறுகின்றனர். அதன்படி, அனுபவம் வாய்ந்த அஸ்வின், ஜடேஜா மற்றும் குலதீப் ஆகியோரை ரசிகர்கள் அணியில் இடம்பெறப் பரிந்துரை செய்கின்றனர்.
எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன் :
இந்திய அணி :
ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, யாஷ் தயாள்.
வங்கதேச அணி :
நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), ஷகிப் அல் ஹசன், மஹ்முதுல் ஹசன் ஜாய், ஜாகிர் ஹசன், ஷத்மான் இஸ்லாம், மெஹிதி ஹசன் மிராஸ், மொமினுல் ஹக், லிட்டன் குமர் தாஸ் (விக்கெட் கீப்பர்), தைஜுல் இஸ்லாம், நயீம் ஹசன், தஸ்கின் அகமது.
எங்கு பார்க்கலாம் :
இந்தியா விளையாடும் போட்டிகளை நாம் இதுவரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் கண்டு களித்திருப்போம். ஆனால், கடந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்பே இந்தியாவில் நடைபெறும் போட்டிகளின் ஒளிபரப்பும் உரிமையை ஜியோ நிறுவனம் கைப்பற்றி இருந்தது.
இதனால், இந்த வருடம் நடந்த ஐபிஎல் தொடர் கூட நாம் ஜியோ சினிமாவில் பார்த்தோம். அதே போல வங்கதேசத்துக்கு எதிரான இந்த தொடரின் அனைத்து போட்டிகளும் தொலைக்காட்சியில் ஸ்போர்ட்ஸ் 18 சேனலிலும் ,ஆன்லைனில் ஜியோ சினிமாவிலும் இலவசமாகப் பார்க்கலாம்.