INDvsBAN : வங்கதேசத்துக்கு 515 ரன்கள் இலக்கு! கட்டுப்படுத்துமா இந்திய அணி?
நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் வலுவான முன்னிலைப் பெற்று வந்த இந்திய அணி 287 ரன்களுக்கு டிக்லேர் செய்துள்ளனர்.
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இன்று காலை பேட்டிங்கை தொடர்ந்த இந்திய அணியின் கில்லும், பண்டும் அணிக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக விளையாடி வந்தனர்.
இதில், இருவருமே மிகச் சிறப்பாகவே பேட்டிங்கில் ஜொலித்தனர். மேலும், இருவரும் சதம் அடித்து அசத்தினார்கள். அதில், சுப்மன் கில் 119* ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அவருடன் விளையாடிய பண்ட் 109 ரன்கள் எடுத்து மெஹதி ஹசன் பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பிறகு கே.எல்.ராகுல், கில்லுடன் இணைந்து விளையாடி வந்தார்.
சரியாக 64 ஓவர்கள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 514 ரன்கள் முன்னிலை பெற்று இருந்தது. அப்போது, இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா அந்த இன்னிங்க்ஸை டிக்ளேர் செய்தார். இந்த முடிவை ரசிகர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை, ஏனென்றால் 5 நாள் கொண்ட டெஸ்ட் போட்டியில் இரண்டரை நாள் மீதம் இருக்கும் நிலையில் இப்போதே பேட்டிங்கை டிக்ளேர் செய்தது சற்று யோசிக்க வைத்துள்ளது.
கையில் இரண்டு நாட்கள் இருப்பதால் இன்று முழுவதும் இந்திய அணி பேட்டிங் செய்வார்கள் என எதிர்பார்த்தனர். அதனால், ரோஹித் ஷர்மாவின் இந்த டிக்ளேர் முடிவு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. இரண்டரை நாள் இருப்பதால், நிர்ணயிக்கப்பட்ட இந்த 515 ரன்கள் என்பதை நிதானமாக விளையாடினால் கூட வங்கதேச அணியால் இலக்கை எட்டிவிட முடியும்.
இந்திய அணியின் வலுவான பவுலிங் பட்டாளத்தால் வங்கதேச அணி இன்றைய நாளை சமாளிப்பதே கடினமானதாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதற்கு மாறாகவே வங்கதேச அணி இந்த போட்டியை கையாண்டு வருகிறது.
அதன்படி, வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள் விக்கெட்டுகளை இழக்காமல் அணிக்கு வலு சேர்த்து வருகின்றனர். இதனால், இந்த வலுவான கூட்டணி இன்று விக்கெட்டை இழக்காமல் நாளைய நாளும் தொடர்ந்தால் அடுத்தடுத்து களமிறங்கும் வங்கதேச வீரர்களுக்கு கடைசி நாள் இந்த இலக்கு எளிதானதாக அமைந்து விடும் என கருதப்படுகிறது.
இதனால், இந்தியா அணி பவுலர்கள் முடிந்த அளவுக்கு இன்று 5 விக்கெட்டுகளையாவது கைப்பற்ற வேண்டும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இந்திய அணி வங்கதேச அணியை கட்டப்படுத்துமா அல்லது வங்கதேச அணி இந்திய அணிக்கு சவாலாக இருப்பார்களா என்பதை பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும்.