INDvENG : தடுமாறிய இங்கிலாந்து…சுருட்டிய இந்தியா..டார்கெட் இதுதான்!
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட்கள் இழப்பிற்கு 248 ரன்கள் குவித்துள்ளது.
மகாராஷ்டிரா : இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டியானது தற்போது மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி, பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தொடக்கத்தில் அருமையான ஓப்பனிங்கை கொடுத்தது. குறிப்பாக, பிலிப் சால்ட் 43, பென் டக்கெட் 32 என எடுத்து அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். அடுத்ததாக, அவர்கள் ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து 3 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் என்று திணறிக் கொண்டிருந்தபோது களத்திற்கு வந்த கேப்டன் ஜாஸ் பட்லர் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்றே கூறலாம்.
நிதானம் கலந்த அதிரடியில் விளையாடிய அவர் 67 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் குவித்து அணியை ஒரு திடமான நிலைக்கு கொண்டு வந்தார். அதன்பிறகு அவரும் ஆட்டமிழந்தார். அவருக்கு பிறகு அவரைப்போலவே ஜேக்கப் பெத்தேல் அதிரடியாக விளையாடிய நிலையில், அவரும் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதன் காரணமாக இங்கிலாந்து அணி மீண்டும் தடுமாற தொடங்கியது. தொடர்ச்சியாக விக்கெட்களை இழந்து கொண்டிருந்த சுழலில், இறுதியாக இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள தடுமாறிய இங்கிலாந்து 47.4 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 249 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கவுள்ளது.
மேலும், இங்கிலாந்து அணியின் பேட்டிங்கை பொறுத்தவரையில் அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் 52, ஜேக்கப் பெத்தேல் 51, பிலிப் சால்ட் 43 ரன்கள் எடுத்தனர். அதைப்போல, இந்திய அணியை பொறுத்தவரையில் அதிகபட்சமாக ஹர்ஷித் ராணா 3 விக்கெட்களையும், ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்களையும் வீழ்த்தினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.