INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!
சேப்பாக்கில் இன்று தொடங்கிய டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் தமிழக வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் சதம் அடித்து அசத்தியுள்ளார்.
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டிதொடங்கியது. அதில், இன்று நடைபெற்ற முதல் நாள் ஆட்டத்தில் வங்கதேச அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி பேட்டிங் களமிறங்கி விளையாடினார்கள்.
வலுவான பேட்டிங் ஆர்டரை கொண்ட இந்திய அணி தொடக்கத்திலேயே முக்கிய புள்ளிகளான விராட், கில் மற்றும் ரோஹித் சர்மா விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது. இதனால், 34 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்தில் இருந்தது. இந்த நிலையில் ஜோடி சேர்ந்த ஜெய்ஸ்வாலும், பண்டும் வங்கதேச பவுலர்கள் பந்து வீச்சை நிதானமாக கையாண்டு அணியை சரிவிலிருந்து மீட்டனர்.
தேவையான பவுண்டரிகளை அவ்வப்போது இருவரும் அடித்து தட்டிதட்டியே அணிக்கு ரன் சேர்த்தனர். இந்திய அணி ஒரு கட்டத்தில் வலுவான நிலைக்கு வந்த போது நன்றாக விளையாடி கொண்டிருந்த ஜெய்ஸ்வால் 56 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.
அவரைத் தொடர்ந்து பண்டும், கே.எல்.ராகுலும் ஜோடி சேர்ந்து சிறுது நேரம் விளையாடினார்கள். ஆனால், பண்ட் 39 ரன்களுக்கு வெளியேற அவரை தொடர்ந்து கே.எல்.ராகுலும் 19 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இதனால், இந்திய அணி மீண்டும் சரிவை நோக்கி நகர்ந்தது. அப்போது தான் வங்கதேச அணிக்கு சோதனை காலம் தொடங்கியதென்றே கூறலாம்.
ஒரே நேரத்தில் அடுத்ததடுத்து களமிறங்கிய ஆல் ரவுண்டர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் வங்கதேச பவுலர்களை கதிகலங்க வைத்தனர். இவர்களது ஆக்ரோஷம் கலந்த நிதானமான ஆட்டத்தால் வங்கதேச ஃபீல்டர்களுக்கும், பவுலர்களுக்கும் பெரும் சவாலாக அமைந்தனர்.
சிறப்பாக விளையாடிய இருவரும் அணிக்காக நங்குற விளையாட்டை வெளிப்படுத்தினார்கள். அதில், மிகச்சிறப்பாக விளையாடிய அஸ்வின் சதம் அடித்து அசத்தினார். முதல் நாள் முடிவடைந்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் 102* ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார். மேலும், அவருடன் ஜடேஜா 86* ரன்களுடன் களத்தில் உள்ளார்.
மேலும், முதல் நாள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்கள் குவித்து வலுவான நிலையில் இருந்து வருகிறது. வங்கதேசம் அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில், ஹசன் மஹ்மூத் 4 விக்கெட்களும், நஹித் ராணா, மெஹிதி ஹசன் மிராஸ் தலா 1 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளனர். இந்த போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை காலை 9.30 தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.