INDvAUS : அசத்தலான முதல் வெற்றி.. ஆஸ்திரேலியாவை வீழ்த்திய கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி.!

INDvAUS 1st ODI

உலக கோப்பை தொடருக்கு முன்னதாக இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி இந்தியா அணி உடன் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது. அதன்படி, இந்தியா – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியானது நேற்று மொகாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் பிந்த்ரா மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை செய்தது. முதலில் பேட்டிங் செய்ய ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் மார்ஷ்க் மற்றும் வார்னர் களமிறங்கினர். இதில் ஷமி வீசிய பந்தில் மிட்செல் மார்ஷ்க் 4 ரன்களில் வெளியேற, வார்னர் நிதானமாக விளையாடினார். அவருடன் ஸ்டீவன் ஸ்மித் இணைந்து விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்தார்.

தொடர்ந்து விளையாடிய வார்னர் அரைசதம் கடந்து 52 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து ஸ்டீவன் ஸ்மித், லாபசன் இணைந்து விளையாடினார்கள். மீண்டும் ஷமி தனது அட்டகாசமான பந்துவீச்சில் ஸ்டீவன் ஸ்மித்தின் (41 ரன்கள்) விக்கெட்டை வீழ்த்தினார். இதைத்தொடர்ந்து, மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அணியில் இடம் பிடித்த அஸ்வின்,  லாபசனின் (39 ரன்கள்) விக்கெட்டை வீழ்த்தி தனது திறமையைக் காட்டினார்.

இதன்பிறகு கேமரூன் கிரீன், ஜோஷ் இங்கிலிஸ் மற்றும் ஸ்டோனிஸ் போட்டியைத் திறம்பட விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இவர்களையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் பெரிதாக சோபிக்காமல், இந்திய அணியின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் ஆட்டமிழந்து வெளியேறினார்கள். இறுதியில் 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலிய அணி 276 ரன்கள் குவித்தது. இதனால் இந்திய அணிக்கு 277 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணியில் முகமது ஷமி தனது மிரட்டலான பந்துவீச்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். இருவரும் 71, 74 ரன்கள் எடுத்து அவுட் ஆகினர். அதன் பிறகு ஷ்ரேயஸ் அய்யர் 3 ரன்களில் வெளியேற, தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் கே.எல்.ராகுல் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 58 ரன்கள் விளாசி இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார்.

இதற்கிடையில் இஷான் கிஷன் 18 ரன்களும், சூரியகுமார் யாதவ் 50 ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர். 48.4 ஓவரில் 281 ரன்கள் எடுத்து பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி வீழ்த்தி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 1-0 எனும் வெற்றி கணக்கில் முன்னிலையில் உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்