“அதுக்கெல்லாம் இப்போ பதில் சொல்ல முடியாது!” கடுப்பான ரோஹித் சர்மா!
எதிர்கால முடிவு குறித்து பிசிசிஐ முடிவு செய்ய சொன்னதாக வெளியான தகவலுக்கு இப்போது விளக்கம் அளிக்க முடியாது என ரோஹித் சர்மா திட்டவட்டமாக கூறியுள்ளார்.
நாக்பூர் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இன்று (பிப்ரவரி 6) இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியை எதிர்கொள்ள உள்ளது. இப்போட்டி நாக்பூர் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த 3 போட்டிகளை அடுத்து உடனடியாக துபாயில் (பாகிஸ்தான்) நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ளது.
இறுதியாக நடைபெற்ற ஐசிசி டி20 உலக கோப்பையை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்ற பிறகு, ரோஹித் சர்மா தனது சர்வதேச டி20 கிரிக்கெட் ஓய்வை அறிவித்தார். அதன் பிறகு நடக்கும் ஐசிசி 50 ஓவர் கோப்பை தொடர் என்பதால், இந்த போட்டி முடிந்த பிறகு ரோஹித் எதிர்கால இந்திய அணியை கருத்தில் கொண்டும், உலக கோப்பையையும் கருத்தில் கொண்டும் முடிவு செய்ய வேண்டும் என அவரது ஓய்வு குறித்து மறைமுகமாக பிசிசிஐ கேள்வி எழுப்பியதாக தகவல்கள் வெளியாகின. மேலும், இந்திய அணியின் எதிர்கால மாற்றங்கள் சுமூகமாக இருக்க வேண்டும் என பிசிசிஐ விரும்புவதாகவும் கூறப்பட்டிருந்தன.
இதுகுறித்த கேள்வி நேற்று ரோஹித் சர்மாவிடம் எழுப்பப்பட்டது. இன்று (பிப்ரவரி 6) இந்தியா – இங்கிலாந்து ஒருநாள் தொடரின் முதல் போட்டி நாக்பூரில் நடைபெற உள்ள நிலையில், அதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அப்போது தான், பிசிசிஐ பற்றி உலாவரும் தகவல்கள் பற்றி ரோஹித்திடம் கேட்கப்பட்டது.
சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு அடுத்து டெஸ்ட் சாம்பியன்ஷிப், உலக கோப்பை ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்திய அணியின் எதிர்கால திட்டம் குறித்து ரோஹித் சர்மா முடிவு செய்ய வேண்டும் என பிசிசிஐ கூறியதாக தகவல் வெளியானதே என ரோஹித் ஓய்வு குறித்து மறைமுகமாக எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த ரோஹித், “பல ஆண்டுகளாகவே இவ்வாறான செய்திகள் உலா வருகின்றன. இப்போது அந்த செய்தி பற்றி விளக்கம் அளிக்க நான் இங்கு வரவில்லை” என தனது ஓய்வு குறித்த மறைமுக கேள்விக்கு திட்டவட்டமாக பதில் அளித்தார். மேலும், “எங்களுக்கு (இந்திய அணிக்கு) இங்கிலாந்து எதிராக மூன்று ஒருநாள் போட்டிகள், அதனை அடுத்து சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் வரவுள்ளன. இந்த போட்டிகளில் கவனம் செலுத்துவது தான் தற்போது மிகவும் முக்கியம். எனது கவனம் இந்த ஆட்டங்களின் மீது தான் உள்ளது. இந்த போட்டிகளுக்கு பிறகு என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்போம்.” என ரோஹித் சர்மா திட்டவட்டமாக கூறினார்.